முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கினை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள G.S.T வரி இழப்பீட்டுத் தொகையினை ஒன்றிய அரசிடமிருந்து விரைந்து பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை குறித்த புகார்களைத் தெரிவிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை வாயிலாகப் பெறப்படும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் எவ்விதத் தொய்வுமின்றித் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பொதுமக்களுக்கு நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்த வரி வருவாயானது அத்தியாவசியமனது என்பதால், வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய வரியினை வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
வணிகர் நல வாரியம் சீரிய முறையில் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், வணிகர் நல வாரியத்தில் வணிகர்கள் உறுப்பினராகி அதன் சேவைகளைப் பெறுவதற்குத் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பதிவுத்துறையில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் உள்ள ஆவண தொகுதிகளைக் கணினியில் பதிவுசெய்தல் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார். இதன்மூலம், இப்பணிகள் முடிவடைந்த பின்பு பொதுமக்கள் இணைய வழியாக ஆவணங்களின் சான்றிட்ட நகல்களைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்படுவதோடு, பட்டா மாறுதல் செய்யும்போது தொடர்புடைய ஆவணங்களை வருவாய்த் துறையினர் இணைய வழியாகப் பார்வையிடவும் இயலும். பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்றவகையில் எளிதானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் அமைய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறைஅமைச்சர் திரு. பி.மூர்த்தி, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர், வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர், திரு.ச.கிருஷ்ணன், அருள், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.