காங்., கட்சியில் அவுரங்கசிப் காலத்து வாரிசு தேர்வு: பிரதமர் மோடி தாக்கு..


காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட இருப்பதன் மூலம், ஔரங்கசீப் காலத்து வாரிசு அரசியலை அக்கட்சி கைவிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, தர்மாபூர் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது, முகலாயர் ஆட்சிக் காலத்தில் அவுரங்கசீப் மன்னரானபோது தேர்தலா நடைபெற்றது என காங்கிரசின் மூத்த தலைவர் மணி ஷங்கர் அய்யர் கேட்டதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். இதன் மூலம் அக்கட்சியின் தலைவர்கள் வாரிசு அரசியலை ஏற்றுக் கொண்டிருப்பது தெளிவாகிறது என்றும் மோடி கூறினார்.

கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதன் மூலம், அவுரங்கசீப் காலத்து வாரிசு அரசியலை அவர்கள் கைவிடவில்லை என்பது நிரூபணம் ஆகி இருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

பின்னர் பாவ்நகர் (Bhavnagar) பகுதியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, குஜராத் மக்கள் தேர்தல் நேரப்பேச்சுகளை எப்போதுமே நம்புவதில்லை என்றும், லாலிபாப்பைப் போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து, காங்கிரஸ் கட்சி அவர்களை ஏமாற்ற முடியாது என்றும் கூறினார்.