முக்கிய செய்திகள்

மகாராஷ்ட்ராவில் ராஜ்தாக்கரேவுடன் கைகோர்க்க காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் தீவிரம்

மகாராஷ்ட்ராவில், தனது பழைய கூட்டாளியான சிவசேனாவுடனான உறவை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பாஜக  இறங்கியுள்ள நிலையில், ராஜ்தாக்கரே தலைமையிலான எம்என்ஸ் கட்சியைச் சேர்த்து வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற மாகாரஷ்ட்ரா உள்ளாட்சித் தேர்தலில் ராஜ்தாக்கரே தலைமையிலான எம்என்எஸ் (மகாராஷ்ட்ரா நவ நிர்மான்) கட்சி பல இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதையடுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் தரப்பில் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தரப்பில்  முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் அஜித் பவார் ஆகியோர் ராஜ்தாக்கரேயைச் சந்தித்து இதுகுறித்து தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாஜவுக்கு எதிரான ஒரு வாக்கைக் கூட வீணாக்கிவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்தக் கூட்டணி முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. மூன்று மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வலிமை நிரூபிக்கப்பட்டிருப்பதால் இந்த முயற்சி 2019 தேர்தலில் நிச்சயம் வெற்றியைத் தேடித்தரும் என்றும் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ராஜ்தாக்கரேவின் வடமாநிலத்தவர் எதிர்ப்புக் கொள்கையால் பாதிப்பு ஏற்படக் கூடும் என காங்கிரஸ் மாநில தலைவர் சஞ்சய் நிருபம் இந்தப் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், இந்த விவகாரத்தில் மற்றவற்றை பின்னுக்குத் தள்ளிவி்ட்டு பாஜக எதிர்ப்பை தற்போது பிரதானப் படுத்த வேண்டும் என்ற முடிவை நோக்கி மூன்று கட்சிகளும் நகர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், ராஜ்தாக்கரேவும் இதுவரை இரண்டு முறை தனியே சந்தித்துப் பேசியதாக வெளியான தகவலை, எம்என்எஸ் கட்சியின் சந்தீப் தேஷ்பாண்டே ஊடகங்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார்.

 இதன் மூலம், மகாராஷ்ட்ராவில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமையும் சூழல் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

– புவனன்

Congress, NCP Focus on Raj Thackeray To Form anti-BJP front