காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி என்பது முடிவாகிவிட்டநிலையில், வேறு யாருடனும் பேச்சுக்கு தயாராக இல்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி இன்று தெரிவித்தார்.
கர்நாடகத்தில் உள்ள 222 கடந்த 12-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், பாஜகவுக்கு 104 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 37 இடங்களும், இதரகட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன.
தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காதநிலையில், பாஜக மட்டுமே தனிப்பெரும் கட்சியாக மாநிலத்தில் உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து, அவர்களை ஆட்சி அமைக்கக் கோரியது. இதற்கு ஜேடிஎஸ் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள்.
அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார்கள். இதனால், ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. தனிப்பெரும் கட்சியா பாஜகவை ஆட்சி அமைத்து 7 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கூறியுள்ளதாக பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். ஆனால், ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வத் தகவல் இல்லை.
இந்நிலையில், பாஜகவினர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, காங்கிரஸ், ஜடிஎஸ் எம்எல்ஏக்கள் இழுக்கும் திட்டத்துடன் காய்களை நகர்த்தத் தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் உள்ள லிங்காயத் சமூகத்தின் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.
இதற்கிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமியுடன் பேச்சு நடத்தி, கூட்டணி ஆட்சிக்கு பாஜக திட்டமிட்டது. இதற்காக பாஜக மூத்த தலைவர்கள் மூலம் தூது அனுப்பி பேசியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை பெங்களூரு நகரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க எச்டி குமாரசாமி வந்தார்.
அப்போது அவரிடம் பாஜகவினர் உங்களுடன் பேச்சு நடத்துவதாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ”காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துவிட்டோம். இந்த சூழலில் யாருடனும்,(பாஜக) பேச்சு நடத்த நாங்கள் தயாராக இல்லை. காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முடிவில்தான் இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் கூட்டி இருக்கிறோம். ஆதலால், இதைத் தவிர்த்து வேறு எந்த முடிவும் நாங்கள் எடுக்கப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.
எச்.டி.குமாரசாமியின் இந்த திட்டவட்டமான அறிவிப்பு பாஜகவினருக்கு பெரும் பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், ’’தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்வரை காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர். இப்போது கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிபுறவாசல் வழியாக வர முயற்சிக்கிறது’’ எனத் தெரிவித்தார்.