காங்கிரஸ், கொ.ம.தே.க., வி.சி. ஆகிய கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் குறித்து இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தில் விருப்பமனு அளித்திருந்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி ஆர் பாலு ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை முதல் இரவு வரை நடைபெற்ற நேர்காணலில் 900க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய ஜனநாயக கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்ற பேச்சு வார்த்தை முடிந்துள்ளது.

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் குறித்து அறிவாலயத்தில் இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கப்பட்ட 2 தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது.

இந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததும் எந்நேரமும் தொகுதி மற்றும் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.