பணமதிப்பு ரத்து நடவடிக்கையை தொடர்ந்து எதிர்ப்போம் : மதுரை ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..


ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நாளை கருப்பு நாளாக அனுசரிக்கின்றன எதிர்கட்சிகள். மதுரையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆர்பாட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆர்பாட்டத்தின் போது பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், பணமதிப்பு இழப்பு அறிவிப்பு நாள் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது என்றார். நவம்பர் 8ம் தேதி வேதனைகள் நிறைந்த நாள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். 125 கோடி மக்களுக்கு துன்பத்தை உருவாக்கிய நாள் நவம்பர் 8 என்று அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நாள் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கூலித்தொழிலாளிகள், நோயாளிகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வங்கி ATM வாசல்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாண்டார்கள் என சாடினார்.
பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். மேலும் பேசிய அவர் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் பணமதிப்பு ரத்து நடவடிக்கையை தொடர்ந்து எதிர்ப்போம் என்றார். கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என சொல்லி மக்களுக்கு சுமையை ஏற்படுத்திவிட்டதாக சாடியுள்ளார். நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நள்ளிரவிலேயே இழந்து நிற்கிறோம் என்றார். எந்த திட்டமும் இல்லாமலேயே மத்திய அரசு முன்யோசனையின்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.