தமிழ்நாட்டை பலவகையில் வஞ்சிக்கும் மத்திய அரசு; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

ஒரு வார காலம் கடந்த பிறகும், கஜா புயலால் தாக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் இயல்பு நிலை திரும்பவில்லை.
இயல்பு நிலை திரும்பிட இன்னும் காலம் ஆகும் எனத்தெரிகிறது. பசி-தாகம்-இருட்டு என வாழ்க்கையே வறண்டு இருண்டுபோன நிலையில் மக்கள் பல்வேறுவகை இன்னல்கள் சூழத்தவிக்கிறார்கள்.
இயற்கைப் பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய ஆட்சியாளர்களோ அரை மணிநேரம் கூட செலவிட அக்கறையின்றி ஹெலிகாப்டரில் ஆலவட்டம் சுற்றிவிட்டுப் போய்விட்டனர்.
இந்த உண்மையைச் சொன்னால்கூட பேரிடர் நேரத்திலும் அரசியல் செய்கிறாரா எதிர்க்கட்சித் தலைவர் என்று தி.மு.க. மீது பாய்ந்து, திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைத்திட வேண்டும் என்பது ஒன்றே இலக்காகும்.
மற்ற மாவட்டங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மை என்பது அத்திவாசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உரிய வகையில் நிவாரணம் வழங்குவதுமாகும்.
இவை இரண்டிலும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் போதிய கவனம் செலுத்தும் குணமில்லாததால் மக்களின் கோபாவேசத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனை ஒளிவுமறைவின்றி எடுத்துச் சொல்ல வேண்டியது பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் கடமை.

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தவித்துக்கொண்டிருக்கும்போது, மிகவும் தாமதமாக சாவகாசமாக 5 நாட்கள் கழித்து முதலமைச்சர் ஹெலிகாப்டரில் பறக்கிறார்.
அப்போதும் முழுமையாகப் பார்வையிடாமல், மழையைக் காரணம் காட்டி 5 நிமிட ஆறுதல் சந்திப்பு ஏதோ ஒரு பெயருக்காக நிகழ்த்திவிட்டுத் திரும்பிவிடுகிறார்.
புயல் வீசிய பகுதியில் மழை பொழியத்தான் செய்யும் என்பது தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சருக்குத் தெரியாதா? தாமதமாக மேற்கொண்ட பயணத்தையும் மழையைக் காரணம் காட்டி ரத்து செய்யலாமா என்பது எதிர்க்கட்சித் தலைவரான என்னுடைய கேள்வி அல்ல.
பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள், மாணவர்கள், பெண்கள், ஏழை-எளிய மக்களின் கேள்வி. மக்கள் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்குரியது.

“ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாடிய திரைப்பாடல் இவர்களுக்குத் தெரியாதா? எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன என்றால் அவர்களை அழைத்து,
எடுத்த எடுப்பிலேயே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைக் கூறுங்கள் எனக் கேட்டு, அதனடிப்படையில் மத்திய அரசிடம் அறிக்கை அளித்து, சேத மதிப்பீட்டிற்கேற்ற நிவாரணத்தைப் பெற வேண்டியது
ஆளுங்கட்சியின் கடமை. இங்கே அவசரக்கோலத்தில் மதிப்பீடு செய்து, வேகவேகமாக டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து நிவாரணம் கோரியிருக்கிறார் முதலமைச்சர்.
டெல்லி செல்வதில் இருந்த அவசரம், நிவாரணப் பணிகளில் இல்லையே என்ற கேள்வியைத்தான் எதிர்க்கட்சியினர் கேட்கிறோம்.
கேட்பதுடன் நிறுத்தவில்லை. நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தக் கோருகிறோம்.

கஜா புயல் கரை கடந்த அன்று காலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் வெளியிட்ட அறிக்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாராட்டியதுடன்,
அரசின் நிவாரணப் பணிகளுடன் இணைந்து செயல்படும்படி தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான உங்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தேன்.
நிவாரணப் பணிகளில் இரவு-பகல் பாராமல் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், துப்புரவாளர்கள், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோரையும் பாராட்டத் தவறவில்லை.
ஆனால், புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவில்லை என்றும், அரசு அதிகாரிகள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்றும் மக்கள் அவலக்குரல் எழுப்பும்போது,
அதனை அப்படியே எதிரொலிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை. அதைத்தான் தி.மு.கழகம் செய்கிறது.

அந்தக் கடமையுடன், நிவாரணப் பணிகளை வழங்கும் முக்கியக் கடமையையும் தொடர்ந்து மேற்கொள்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
முதலமைச்சரிடம் கழகத்தின் சார்பிலான 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை நேரில் அளித்திருக்கிறார் கழகப் பொருளாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.
கழகத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிவாரண நிதியாக வழங்க உள்ளோம்.

கழக நிர்வாகிகள் பல பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்களை சேகரித்து திருச்சியில் உள்ள மாவட்டக் கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஒப்படைக்கும்படி கழகத்தின் தலைவர் என்ற முறையில் நான் விடுத்த வேண்டுகோளுக்கு செவிமடுத்து, நிவாரணப் பொருட்களைக் குவித்துவிட்டனர் நமது கழகத் தோழர்கள்.

அந்த நிவாரணப் பொருட்களை, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களிடம் வழங்கும் பணியை, இருவண்ணக் கொடி அசைத்து நான் தொடங்கி வைத்திட வேண்டும் என்ற கழக நிர்வாகிகளின் அன்புக் கோரிக்கையை ஏற்று, திருச்சி கலைஞர் அறிவாலயத்திலிருந்து கொடி அசைத்து 100 லாரிகள் அளவிலான ஏறத்தாழ 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை நேரில் சென்று அனுப்பி வைத்துள்ளேன். அதில், 400 டன் அரிசி, குடிநீர், பருப்பு, , கோதுமை, ரவை, மைதா, சமையல் எண்ணெய், மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை, பெட்ஷீட், துண்டு, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

உதவிடும் நோக்கத்துடன் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கையை, அவசரகால உத்தரவாக ஏற்று அல்லும் பகலும் பணியாற்றி நிவாரணப் பொருட்களைச் சேகரித்த கழகத் தோழர்களுக்கும், நிதி அளித்த உடன்பிறப்புகளுக்கும், பொருட்களாகக் கொடுத்த தொண்டர்களுக்கும், இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கொண்டு வந்து சேர்த்த நிர்வாகிகளுக்கும், அவற்றைப் பாதிக்கப்பட்ட மக்களிடம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள்-உடன்பிறப்புகள் அனைவருக்கும் அவர்களுடைய அற்புதமான மனிதநேயத்தைப் பாராட்டிப் போற்றி நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

4 கோடி மதிப்பிலான நிதியுடன் நமது பணி முடிந்துவிடவில்லை. கழக மகளிரணி சார்பிலும், சென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பிலும் இன்னும் பல மாவட்டக் கழகங்களின் சார்பிலும் தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் டெல்டா மாவட்டங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. பொதுமக்களின் ஒத்துழைப்புடனும் தன்னார்வலர்களின் ஆதரவுடனும் கழகத்தினர் மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள், புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் கரங்களாகவும் நமது நெஞ்சுக்கு நிம்மதி தரும் வகையிலும் தொடர்கின்றன.

அண்ணா வழியில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிற இயக்கம் இது. இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பட்டினியிலிருந்தும் தாகத்திலிருந்தும் மீட்டு, அவர்களுக்கு அன்புடன் உதவி செய்து, அதன் மூலம் அவர்கள் முகத்தில் ஒளிர்கிற மெலிதானப் புன்னகையில் இறைவனைக் காண்கிறது கழகம். இத்தகைய மகத்தான மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள கழகத்தினரையும் பொதுமக்களையும் மனமார வாழ்த்துகிறேன்.

புயலால் பெருஞ்சேதம் என்ற செய்தி கிடைத்த மறுநாளே, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்து மக்களின் நிலையை அவர்கள் வாயாலேயே சொல்லக் கேட்டறிந்தேன். ஆனால், ஹெலிகாப்டரில் மட்டுமே வலம் வந்த முதலமைச்சரோ, எதிர்க்கட்சித் தலைவர் 3 இடங்களைத்தான் பார்த்தார் என்றும், தான் ஹெலிகாப்டர் மூலம் எத்தனை மரங்கள் சாய்ந்தது என்பதைத் துல்லியமாகப் பார்த்ததாகவும் தன்மனமறிந்து உண்மைக்கு மாறானதைக் கூறியிருக்கிறார்.

முதலமைச்சர் அவர்கள் ஹெலிகாப்டரில் பறந்து, மரங்கள் சாய்ந்ததைத்தான் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவரான நான், தரை மார்க்கமாகச் சென்று, மக்களின் வாழ்வாதாரமே சரிந்து சாய்ந்து கிடக்கும் சோகத்தை நேரில் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். அந்த வாழ்க்கையைத் தாமதமின்றி நிமிர்த்துங்கள் என்று ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைக்கிறேன்;வேண்டுகோள் விடுக்கிறேன். வெறும் 3 இடங்களைப் பார்த்துவிட்டுச் சொல்லவில்லை. பெரிதும் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களின் நீள-அகலங்களைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

நவம்பர் 22-ந் தேதியன்று திருச்சியிலிருந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்ததுடன், அங்கிருந்து புறப்பட்டு செங்கிப்பட்டி, தச்சங்குறிச்சி, கோமாபுரம், கந்தர்வக்கோட்டை, திருவோணம் 4 ரோடு, கறம்பக்குடி, நெய்வேலி, இடையாத்திப்பாலம், வாட்டாத்திக்கொள்ளக்காடு, சீத்தாம்பாள்புரம், துறவிக்காடு, புனவாசல், ஒட்டங்காடு, கொன்னகாடு, சிறுவா விடுதி, திருச்சிற்றம்பலம், அம்மையாண்டி, ஆவணம் கைகாட்டி, மாங்காடு, அணவயல், வடகாடு, கீழாத்தூர், ஆலங்குடி, திருவரங்குளம், புதுக்கோட்டை, திருவப்பூர், நார்த்தாமலை, கீரனூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் மீண்டும் சென்று, மக்கள் அடைந்துள்ள பாதிப்பை நேரில் அறிந்தேன்.

பிள்ளையை இழந்த பெருந்துக்கம் போல தென்னையை இழந்து தவிக்கிறார்கள் விவசாயிகள். நெற்பயிர்கள் பாழாகிக் கிடக்கின்றன. குடிசை வீடுகள் இருந்த இடம் தெரியாமல் கட்டாந்தரையாகிவிட்டன. ஆடு-மாடுகளை இழந்து தவிக்கிறார்கள். இன்னும் பல கிராமங்களுக்கு உணவு-குடிநீர் கிடைக்கவில்லை. நகர்ப்புறங்களில் நடைபெறுகிற நிவாரணப் பணிகள், பிரதான சாலைகளைக் கடந்து உள்புறங்களுக்குச் சென்றபாடில்லை. மின்சாரம் எப்போது திரும்ப வரும் எனத் தெரியாமல் இருளில் தவிக்கின்றன பல பகுதிகள். அங்கெல்லாம் இயன்ற உதவிகளைச் செய்திடுமாறு, கழக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளேன்.

தி.மு.கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழகத் தோழர்கள் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தீவிரப் பணியாற்றி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்டச் செயலாளர்களும் களப்பணியாற்றி வருகிறார்கள். ஆங்காங்கே உள்ள கழகத் தொண்டர்கள் அவர்களுடன் இணைந்து மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

புயலின் கொடூரத்திலிருந்து ஒரு வாரகாலமாகியும் விடுபடாமல் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்படவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இது குற்றச்சாட்டு அல்ல.. கோரிக்கை. கண்ணீர் கலந்த வேண்டுகோள். மக்களின் துயர் துடைக்க உதவிக் கரங்கள் நீளட்டும். புயல் சேதத்தை முழுமையாக மதிப்பிடாத நிலையில், மத்திய அரசிடம் 15ஆயிரம் கோடி நிவாரணத் தொகை கேட்டுள்ளது மாநில அரசு.

தமிழ்நாடு என்றால் பல வகையிலும் வஞ்சித்து வரும் மத்திய அரசு, இம்முறையாவது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படாமல், இந்தியத் தாயின் கடைக்கோடிப் பிள்ளை தவியாய்த் தவிப்பதை உணர்ந்து, தாய்மை உணர்வு கொண்டு நிவாரண நிதியினை தாராளமாக வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய-மாநில அரசுகளின் நிதி மக்களைச் சென்றடையும் வரை கழகத்தினர் எப்போதும் போல களப்பணியில் ஈடுபட்டு, கஜா புயலின் தாக்குதலால் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் தொடர்ந்து கை கொடுத்து, வடியும் கண்ணீரைத் துடைத்திடுவீர்!

அன்புடன்,

மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் ஆண்டு 2049, கார்த்திகை 07.

23-11-2018.

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் : வதந்திகளை நம்பவேண்டாம் …

கஜா புயல் பாதிப்பை பார்வையிட மத்தியக் குழு வந்தாச்சு… பலன் கிடைக்குமான்னுதான் தெரியலை…

Recent Posts