முக்கிய செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு : சென்னையில் ரூ.4 உயர்வு..

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து 2-வது மாதமாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த மாதம் மிகவும் குறைவாக ரூ.4 வரை நகரங்களுக்கு ஏற்றார்போல் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் எண்ணெய் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3-வது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்த நிலையில், கடந்த மாதம் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.11 முதல் அதிகபட்சமாக ரூ.37 வரை விலை உயர்ந்தது.

அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையில் மானியம் அல்லாத 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் ஜூன் மாதம் 37 ரூபாய் உயர்த்தி 606 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயித்து இருந்தது.

இந்த மாதம் சமையல் காஸ் சிலிண்டர் விலை ஒரு ரூபாய் முதல் ரூ.4 வரை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.610.50க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு ஜூலை 1-ம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.594 விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தாவில் 4 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.620.50க்கு விற்கப்படுகிறது. மும்பையில் ரூ.3.50 உயர்த்தப்பட்டு ரூ.594க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.