முக்கிய செய்திகள்

‘கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசு’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..


15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி, மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தையே அழிக்கிறது. அனைத்து மாநில முதல்வர்களும் ஒருங்கிணைந்து இதை எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலை கருத்தில்கொண்டு, கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்துவந்தது. இதற்கு முன் நாள்தோறும் பைசாக்களில் விலை உயர்த்தப்பட்டும், குறைக்கப்பட்டும் வந்தது. ஆனால், 19 நாட்களுக்குப் பின் இன்று திடீரென பெட்ரோல் ஒரு லிட்டர் 17 காசுகளும், டீசல் லிட்டருக்கு 21 காசுகளும் அதிகரித்தன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்து, ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”கர்நாடகத் தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் சிறிய இடைவேளை கொடுக்கப்பட்டிருந்தது. மீண்டும் விலை உயர்வு வந்துவிட்டது. பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்படும் அதிகமான வரி, நுகர்வோர்கள் தலையில்தான் விழும்.

15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனக் கூறி கேரள நிதி அமைச்சர் டிஎம் தாமஸ் ஐசக் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து மாநில முதல்வர்களும், நிதி அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து, அரசியலமைப்புச் சட்டத்தை மீறியும் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.”

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

15-வது நிதிக்குழுவில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஏராளமான பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. வளர்ந்த 1971 ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு இல்லாமல், 2000 ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் நிதி ஒதுக்கீட்டில் பாதிக்கப்படும். இதுகுறித்துப் பேச சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தென் மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டை கேரள அரசு கூட்டி இருந்தது. இதில் தமிழக அரசு தவிர மற்ற தென்மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.