சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் பொது முடக்கம் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொது முடக்கம் அமலாகிறது.
ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்கள் பொது முடக்கம் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 21, 28 ஆகிய இரு நாட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.
முழு ஊரடங்கு காலத்தில் சென்னை மற்றும் 3 மாவட்டங்களில் வங்கிகள் 10 நாட்கள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கின் போது 104 (கட்டுப்பாட்டறை) மற்றும் 108 (அவசரகால ஊர்தி) ஆகிய சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் மற்றும் ஆபத்து கால மருத்துவ உதவி ஆகியவற்றை சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் மூலம் ஒருங்கிணைக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் பொது முடக்கம் அறிவித்த நிலையில் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.