கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், டெல்லியின் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
இவர்கள் உத்தரப்பிரதேசம், பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற வட மாநிலங்களில் இருந்து வந்து டெல்லியில் வேலை செய்த தினக்கூலித் தொழிலாளர்கள்.
டெல்லியில் வாழும் காய்கறி விற்பவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என பலரும் அருகில் உள்ள இந்த வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான்.
தற்போது இந்த ஊரடங்கு உத்தரவால் பணி இல்லாமல், செய்வதறியாமல் தவித்த தொழிலாளர்கள், சாரை சாரையாக அவர்களது சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கிறனர்.
கரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரே வழி சமூக விலகல்தான் என்றும் வீட்டிலேயே தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது இவர்கள் கவலையெல்லாம், அடுத்த வேலை உணவும் தங்களது சொந்த ஊர்களுக்கு எப்படியாவது போய் சேர்ந்துவிட வேண்டும் என்பதும்தான்.
சுமார் பத்தாயிரம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்க, இதற்கு காரணம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்தான் என சமூக ஊடகங்களில் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அவரை கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டாகும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த முழுப்பிரச்சனைக்கு கேஜ்ரிவால் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி பலரும் விமர்சித்து வருகிறார்கள்.