கரோனா பாதிப்பு 82 ஆயிரத்தை நெருங்குகிறது: 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் பாதிப்பு..

இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் விதிக்கப்பட்டிருந்தும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 100 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 967 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளது.

27ஆயிரத்து 920 பேர் குணமடைந்துள்ளனர், 51 ஆயிரத்து 401 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
உயிரிழப்பைப் பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர், இதன் மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 649ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே அதிகஅளவு கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 2-ம் இடத்தில் இருந்த குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழகம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி கரோனாவால் குணமடைந்துவருபவர்கள் சதவீதம் 34.06 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை காலை முதல் இதுவரை 100 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் மகாராஷ்டிராவில் 44 பேர், குஜராத்தில் 20 பேர், டெல்லியில் 9 பேர், மேற்கு வங்கத்தில் 8 பேர், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசத்தில் தலா 5 பேர், ராஜஸ்தானில் 4 பேர், தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்