முக்கிய செய்திகள்

தமிழகத்தில் கரோனா?: புதுக்கோட்டையில் ஒருவர் உயிரிழப்பு..

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சீனா சென்று திரும்பிய நிலையில் திடீரென மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணி, தொழில் மற்றும் கல்வி நிமித்தமாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் சீனாவில் இருந்து வந்தனர்.

தற்போது கரோனா பாதிப்பையடுத்து அங்கிருந்து பலர் மீண்டும் தமிழகம் திரும்பியுள்ளனர். அவர்களை மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள கோதைமங்கலத்தைச் சேர்ந்த சக்திகுமார் (42), சீனாவில் 2 ஓட்டல்கள் நடத்தி வந்தார்.

மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு அதிகரித்த காரணத்தால் கடந்த 4-ந்தேதி புதுக்கோட்டை திரும்பியவர்,

மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி 15-ந்தேதி மரணமடைந்தார்.

நோய் குணமாகாத சூழலில் இடையே ஓட்டலில் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் அவர் மீண்டும் சீனா சென்று திரும்பியதாகக் கூறப்படுகிறது.

மேலும் அவர் சீனாவில் இருந்து திரும்பிய விவரம் சுகாதாரத்துறைக்கு அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரது மரணம் சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இறப்புக்கு மஞ்சள் காமாலை காரணமா அல்லது கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.