நீதிமன்றத்தை அவதூறாக பேசிய புகாரை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், எச்.ராஜாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இந்து முன்னணி மற்றும் செய்யபுரம் பொது மக்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்ற இருந்தனர்.
இதன்படி, அந்த ஊரில் உள்ள மகாமுத்து மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது.
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அப்போது, விநாயகர் சிலையை ஊருக்குள் எடுத்துச் செல்ல முயற்சி நடந்தது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து போலீசாருடன், எச்.ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்துக்களுக்கு எதிராக போலீஸ் அதிகாரி செயல்படுவதாக எச்.ராஜா குற்றம் சாட்டினார். ஆனால் அதை மறுத்த போலீசார், ‘‘உயர்நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுகிறோம்’’ என்றனர்.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி எச்.ராஜா விமர்சனம் செய்தார். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகப் பரவியது.
அந்த வீடியோ பதிவு காட்சிகளை பார்த்தவர்கள், எச்.ராஜாவின் ஆவேச பேச்சை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். நீதித்துறையை அவர் கடுமையாக விமர்சனம் செய்தது அதிர் வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து வழக்கறிஞர் ஆர்.சுதா என்பவர், தமிழக டி.ஜி.பி.க்கு புகார் மனுவை அனுப்பினார். இதற்கிடையில், எச்.ராஜா மீது திருமயம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். எச்.ராஜாவை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் இன்று காலை வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.
அப்போது வழக்கறிஞர்கள் ஆர்.சுதா, கனகராஜ், ராஜாமுகமது உள்ளிட்டோர் ஆஜராகி, ‘எச்.ராஜா நீதித்துறையை தரக்குறைவாக பேசியுள்ளார்.
எனவே, அவர் மீது இந்த உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்றம்அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு நீதிபதிகள், ‘எச்.ராஜா மீது போலீஸ் தரப்பில் பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, ஏதாவது புகார் தெரிவிக்க வேண்டும் என்றால், போலீசாரிடம் புகார் மனு கொடுங்கள். எச்.ராஜா மீது தாமாக முன்வந்து நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை நாங்கள் பதிவு செய்ய முடியாது’ என்றனர்.
அதற்கு வக்கீல்கள், ‘போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இதற்கு முன்பு பல வழக்குகளில் போலீசார் இவ்வாறு செயல்பட்டுள்ளனர்.
எனவே, எச்.ராஜா மீது உயர்நீதிமன்றம் தான் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்ய முடியாது. வேண்டுமென்றால்,
எச்.ராஜா மீது நீங்கள் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுங்கள். அந்த வழக்குகளை நாங்கள் விசாரணைக்கு எடுக்கின்றோம்’ என்றனர்.
இதனால் வக்கீல்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அடுத்த சில மணி நேரத்துக்குள் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றொரு அமர்வில் இருந்த நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் இருவரும் எச்.ராஜா தொடர்பான விவகாரத்தை கையில் எடுத்தனர்.
அவர்கள் இருவரும் முதல் நடவடிக்கையாக உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் கண்ணப்பன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் இருவரையும் நேரில் வரவழைத்தனர்.
அவர்களிடம் நீதிபதிகள், ‘‘திருமயம் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் சமுக வலைத்தளங்களில் பரவி வருவதை பார்த்தீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர்கள் இருவரும் கேள்விப்பட்டோம்’’ என்று தெரிவித்தனர்.
உடனே நீதிபதிகள் இருவரும் இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக எச்.ராஜா 4 வாரங்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அதற்கேற்ப சம்மன் அனுப்புங்கள் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து தலைமை பதிவாளரும், அட்வகேட் ஜெனரலும் உடனடியாக எச்.ராஜாவுக்கு சம்மன் அனுப்பும் பணியை தொடங்கியுள்ளனர்.
இதனால் எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.