முக்கிய செய்திகள்

முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்?: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கருணை அடிப்படையில் விடுதலை செய்யும்சிறைவாசிகளோடு, தமிழக சிறைகளில் 10ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு கருணை அடிப்படையில், பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால் பல நூறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறைதகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழக அரசின் இந்த முடிவு, முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் அமலாக்கப் படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.தமிழக சிறைகளில் உள்ளவர்களில் 23 முஸ்லிம்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனர். 3 பேர் 18 வருடங்கள், ஒருவர் 15 வருடங்கள், இருவர் 14 வருடங்கள், 3 பேர்11 வருடங்களுக்கு மேலாகவும் சிறைகளில் உள்ளனர். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் 10 வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்தால் விடுவிக்கப்படுவதும், பிற கைதிகள் தண்டனை காலம் முடிந்தவுடன் விடுதலை ஆவதும் வழக்கமான விதிமுறை. சாதாரணமாக ஒரு ஆயுள்தண்டனை கைதி 13 ஆண்டுகள் கழித்தவுடன் சிறை நடைமுறை விதிகளின்படி மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் நன்னடத்தை அதிகாரி ஆகியோரை கொண்ட குழு அவரின்மனுவை பரிசீலனை செய்து 14 வருடத்தில் அவரை விடுதலை செய்வது வழக்கம். 15வருடத்திற்கு மேல் சிறையில் கழித்திருந்த போதும் கூட முஸ்லிம் சிறைவாசிகள் விசயத்தில் இத்தகைய வழிமுறை பின்பற்றப்படுவ தோ, அவர்கள் விடுவிக்கப்படுவதோ இல்லை. ஏதாவது காரணம் கூறப்பட்டு, தொடர்ந்து சிறையிலேயே அவர்கள் அடைக்கப்பட்டுள்ள னர்.தமிழக அரசு ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளின் போது பத்தாண்டுக் காலம் சிறை தண்டனை கழித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்துவந்தது. அரசியல் சாசனப் பிரிவு 161ன்படி மாநில அமைச்சரவை ஆயுள் கைதிகள் அல்லதுதூக்கு தண்டனை கைதிகளை விடுதலை செய்வதாக முடிவுசெய்து, அதனை மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்தால், அதனை ஏற்று அவர், பரிந்துரைக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிடுவார். இந்த 161வது பிரிவின் படி தமிழக அரசு வருடா வருடம் அண்ணா பிறந்தநாளின் போது கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்து வருகிறது.கொடூரமான குற்றம் புரிந்தவர்களை, உச்சநீதிமன்றம் எக்காரணம் கொண்டும் விடுதலை செய்யக் கூடாது என தீர்ப்பளித்த வர்களைக் கூட தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. ஆனால், விடுதலை ஆவதற்கு முழுத்தகுதிகள் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இருந்தும் இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வரவில்லை.

ஒரு முஸ்லிம் கூட இல்லை

இவ்வாறு பலர் விடுதலையாகி உள்ள நிலையில், கருணை அடிப்படையில் ஒரு முஸ்லிம் கூட விடுதலை செய்யப்படவில்லை என்பது அரசின் பாரபட்சமான போக்கினையே வெளிப்படுத்துகிறது. இது அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற கோட்பாட்டுக்கு முரணானது. அரசியல் சாசனம் வழங்கியுள்ளஉரிமைகள் கூட முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு மறுக்கப்படு வது நியாயமற்றதாகும். கோவை உட்பட பல்வேறு வழக்குகளில் நீதிபதிகள், அவை மத பிரச்சனைகளால் ஏற்பட்ட மோதல்கள் அல்ல என்றே குறிப்பிட்டுள்ளனர். கோவையில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் கருணை அடிப்படையில் பார்க்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் எடுத்துரைத்த போதும், அவர்கள் பிரச்சனை யில் குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வு கூட காண்பிக்கப்படுவதில்லை. அவர்கள் சிகிச்சைக்காக பிணையில் செல்லக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. பலர் மிகுந்த நோய்வாய்பட்ட நிலையில் இருந்தாலும் கூட விடுவிக்கப்படவில்லை. சிறை விதிகளின்படி சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் பரோல் விடுப்பு கூட முஸ்லிம் சிறைவாசிகளுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளது.

மனிதத்தன்மையற்றது; சட்ட விரோதமானது

சிறையில் உள்ள முஸ்லிம்களின் பெற்றோர், மனைவிமார்கள், குழந்தைகள், சகோதர – சகோதரிகள் என அவர்களது குடும்பத்தவர்களின் வாழ்க்கை நிர்க்கதியான நிலையில் உள்ளது. எனவே முஸ்லிம்களை நீண்டகாலம் சிறையில் வைத்திருக்கும் மனித நேயமற்ற செயலை தமிழக அரசு கைவிட வேண்டும். நீதிமன்றங்கள் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலைசெய்ய உத்தரவிட்டும் கூட விடுதலை செய்யாதநிலையும் உள்ளது. 14.12.2017ல் எச்.சி.பி எண் 1606/2017 ல் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ஜாப்ரூ எனும் செயது ஜாகர் அகமதுவை விடுதலை செய்ய உத்தரவிட்டும் அவர் விடுவிக்கப்படவில்லை. நீண்டகாலமாக சிறையில் உள்ள முஸ்லிம்கள் மட்டும் சிறைகளிலேயே அடைக்கப்பட்டுள்ளதும், அரசு கொடுக்கும் சலுகை அடிப்படையிலான தண்டனை காலம் குறைத்து விடுதலை ஆகும் வாய்ப்புக் கூட அவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுவதும் மனிதத் தன்மையற்றது மட்டுமல்லாது சட்டத்திற்கும் விரோதமானதாகும்.எனவே, தமிழக அரசு, 10 ஆண்டு களுக்கும் மேலாக சிறைகளில் உள்ள முஸ்லிம்சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுமெனவும்; வழக்கு விசாரணை இன்றியும்; விசாரணை நீண்டகாலமாக நடந்து வந்தும் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் அடை பட்டும்; பாதுகாப்பு கைதி என்ற பேரில் சிறைகளில் அடைக்கப்பட்டும், நீண்ட காலமாகசிறைகளில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கருணை அடிப்படையில் விடுதலை செய்யப் படும் சிறைவாசிகளோடு உடனடியாக விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

CPM State Secretary K.Balakrishnan Wrote a letter To CM Palanisamy about Muslim prisoners in TN Prisons