ஊழல் செய்தவர், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் தேர்தலில் போட்டியிட முடியாதபோது, அவர் எப்படி அரசியல் கட்சிக்கு தலைவராக இருக்க முடியும் ? என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயே உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில், ஊழல் வழக்கு, கிரிமினல் வழக்குகளில் சிக்கி குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடவும், அரசியல் கட்சிக்கு தலைமை ஏற்கவும் தடை விதிக்க வேண்டும். கட்சியில் எம்எல்ஏ, எம்.பிக்களை அவர்கள் கட்டுப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
மேலும் அந்த மனுவில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோரின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மிகக்கொடிய குற்றங்களான கொலைக் குற்றம், பலாத்காரம், கடத்தல், பண மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களைச் செய்தவர்கள் கூட தற்போது கட்சி தொடங்கி, அதில் தலைவராக முடிகிறது. இதைத் தடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அப்போது அவர் கூறுகையில், “ ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் ஒரு அரசியல் கட்சிக்கு எப்படி தலைவராக வர முடியும்?. இது பரிசுத்தமான தேர்தல் முறைக்கே மிகப்பெரிய இழுக்காகும்.
குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரால் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட முடியாது. ஆனால், அவர் ஒரு கட்சிக்கு தலைமையாக இருக்க முடியும். அந்த கட்சியின் தலைவராக இருந்து, எம்எல்ஏ, எம்பிக்களை கட்டுப்படுத்துகிறார் என்பது மோசமான ஜனநாயக முறையாகும்.
அது மட்டுமல்லாமல்,யார் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஒரு கிரிமினல் முடிவு செய்வது ஜனநாயகத்தின் சாராம்சத்துக்கு விரோதமானதாகும்.
குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் ஒருவர் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட முடியாது. ஆதலால், அவர் ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு, அரசியல் கட்சியை தொடங்குவார், தேர்தலில் அவர்களை போட்டியிட வைப்பார்.
ஆனால் அந்த கட்சியைச் சேர்ந்தவர்களும் சில அமைப்புகளைத் தொடங்கி, பள்ளி, கல்லூரிகளுக்கு உதவி செய்வார்கள். தேர்தலின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்குகிறது.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் அரசியல் கட்சிக்கு தலைவராக இருக்க தடை கொண்டுவருவது குறித்து தேர்தல் சீர்திருத்தம் ஏன் கொண்டுவரக்கூடாது ” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த கூடுதல் சொலிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், “ இது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை” எனத் தெரிவித்தார். இதையடுதத்து வழக்கை 2 வாரங்களுக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா ஒத்திவைத்தார்.