முக்கிய செய்திகள்

கடலூர் பாலியல் வன்கொடுமை வழக்கு: மதபோதகர் அருள்தாஸுக்கு 30 வருட சிறை தண்டனை..

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் கடந்த 2014 ஜூன் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், இரு சிறுமிகளையும் ஆகஸ்ட் 5-ம் தேதி கண்டுபிடித்து மீட்டனர்.

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமிகள் இருவரையும், திட்டக்குடி பகுதியில் வசிக்கும் பாதிரியார் அருள்தாஸ், பாலியல் வன்முறைக்கு உள்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது.

இதேபோல் திட்டக்குடியைச் சேர்ந்த தனலட்சுமி, மேகலா, நெல்லிக்குப்பம் ராதா, கோலியனூர் கூட்ரோடு பாத்திமா, சேலம் அன்பு ஆகியோர் இந்த மாணவிகளை விடுதியில் தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸ் அதிரடி கைது வேட்டையை நடத்தியது, 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டது.

மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கடலூர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது. வறுமையில் உள்ள சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது வெட்கப்பட வேண்டிய செயல் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

குற்றவாளிகளில் 8 பேர் பெண்கள், 8 பேர் ஆண்கள் ஆவர். அவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது.

இதில், குற்றவாளிகளான கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை மற்றும் 42 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மதபோதகர் அருள்தாஸுக்கு 30 வருட சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் ஆனந்தராஜ், பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு 4 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி செல்வராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.