புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு..

புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு திட்டம் மூலம் வீடு கட்டி தரப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டின மாவட்டத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

2வது நாளாக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதிகளில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர், பொது மக்கள் மத்தியில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

சமூக பொருளாதார திட்டங்களில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், இனிமேல் சேர்க்க வேண்டும். புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு திட்டம் மூலம் வீடு கட்டித்தரப்படும். நகர் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளை இழந்தவர்கள்,

கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும். அவர், மத்திய, மாநில அரசுகளிடம் பேசி வீடு கட்டித்தர தேவையான நடவடிக்கை எடுப்பார்.

புயலால் லட்சக்கணக்கான மரங்கள் சேதமடைந்துள்ளன. தங்களது இடங்களில் மரங்களை இழந்தவர்கள், அதனை கணக்கெடுக்க வேண்டும்.

அவர்களுக்கு மத்திய தென்னை வாரியம் மூலம் தென்னங்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் போதுமான தென்னங்கன்றுகள் இல்லையென்றால் அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும்.
அந்தமானில் அதிகமான தென்னங்கன்றுகள் உள்ளன. அவற்றை ராணுவ கப்பலில் தூத்துக்குடி வழியாக கொண்டு வர தயாராக உள்ளோம்.

மத்திய விவசாய அமைச்சர் ராதாமோகனுடன் பேசியுள்ளேன். அவர் எந்த உதவியையும் செய்ய தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளை தோட்டக்கலைத்துறை மற்றும் தென்னை வாரிய அதிகாரிகள் வந்து நேரில் சந்திப்பார்கள்.

மின்பிரச்னை தீரும் வரை இடையூறு இல்லாமல் மண்ணெண்ணெய் வழங்கப்படும்.

இதற்காக, பெட்ரோலியத்துறை அமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட நாட்களுக்கு உங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார்.

அவர், கட்சியில் என்னைவிட மூத்த நிர்வாகி. பல பெருமைகளை கொண்ட தஞ்சாவூர் மக்கள், நம்பிக்கை இழக்கக்கூடாது.

தைரியமாக இருக்க வேண்டும். கஷ்ட காலத்தில், எங்களிடம் கேள்வி கேளுங்கள். இதற்காக உங்களை தவறாக நினைக்க மாட்டோம்.

நம்பிக்கை இழக்காமல், தைரியமாக இருக்க வேண்டும். கேட்கப்படும் உதவி, கேட்கும் வரை செய்யப்படும். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும். மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

பயிர் காப்பீடு திட்டத்தில் கடைசி தேதி வருவதால், காப்பீடு தொகையை மாநில அரசே செலுத்தலாம். இழப்பீடு வரும்போது, செலுத்தப்பட்ட தொகையை கழித்துவிட்டு தரலாம் என மாநில அரசிடம் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.