கடுமையான புயல் பாதிப்பு : பிரதமரிடம் உரிய நிதி கேட்டு பெறுவோம் : முதல்வர் எடப்பாடி பேட்டி..

தமிழகத்தில் புயல் பாதிப்பு கடுமையாக இருந்தது. இதற்காக பிரதமரிடம் உரிய நிதியை கேட்டு பெறுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

இன்றையதினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கஜா புயலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு

அந்தப் பகுதி மக்களுக்கு ஆறுதல் சொல்லி, நிவாரணங்கள் வழங்கலாம் என்று திட்டமிட்டு திருச்சி வந்து திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக, புதுக்கோட்டைக்குச் சென்று,

அங்கு கஜா புயலினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு, அந்தப் பகுதி மக்களுக்கு நிவாரணங்களை அளித்துவிட்டு, பட்டுக்கோட்டைச் சென்று,

பட்டுக்கோட்டையில் கஜா புயலினால் தென்னை மரங்கள் எல்லாம் முறிந்து விழுந்த அந்த இடத்திற்குச் சென்று, நேரடியாகப் பார்வையிட்டு,

அந்த விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லி, அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி திருவாரூர் சென்றோம்.

திருவாரூர் சென்று இறங்குகின்ற சமயத்தில் கடும் மழை. அந்த மழையின் காரணமாக ஹெலிகாப்டர் இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினாலே,

அங்கிருந்து நாகப்பட்டினம் செல்லலாம் என்று திட்டமிட்டுச் சென்றபொழுது, அங்கேயும் கனமழை பொழிந்த காரணத்தினாலே அங்கேயும் இறங்க முடியாத ஒரு சூழ்நிலை.

அதனால், நேரடியாக திருச்சி வந்திருக்கின்றோம். மீண்டும் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் சொல்லி, சேதமடைந்த பகுதிகளை பார்வையிட செல்வோம்.

கேள்வி:- எப்பொழுது செல்வீர்கள்?
பதில்:- பின்னர் அறிவிக்கப்படும்.

கேள்வி: அதுவும் ஹெலிகாப்டரில்தான் செல்வீர்களா?
பதில்:- அந்த சூழ்நிலையை பொறுத்து.

கேள்வி:- எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்துடைப்பு நாடகம் என்றும், புயல் வந்த அடுத்த நாளே விசிட் செய்யவில்லை என்றும் சொல்லியிருக்கின்றாரே?
பதில்:- Cyclone முடிந்து அடுத்தநாளே எப்படித் தெரியும்? இரண்டு, மூன்று நாட்கள் கழித்தால்தான் சேதத்தைப் பார்க்க முடியும், கணக்கிட முடியும். அவர் எதிர்க்கட்சித் தலைவர், உடனே வந்து பார்த்து சென்று விடுவார்,

நாங்கள் அப்படியல்ல. புயலால் பாதிக்கப்பட்ட பகுதி, எந்தெந்த பகுதிகள்? எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றது? என்பதை அதிகாரிகள் மூலமாகத் தெரிந்துகொண்டு

அதற்கேற்ற நடவடிக்கைகள் எல்லாம் எடுத்த பிறகு, அந்தப் பணிகளை எல்லாம் முடுக்கிவிட்ட பிறகுதான் அங்கே செல்ல முடியும். முதற்கட்டப் பணிகள் முடியாமல் அங்கே சென்றால் அந்த மக்கள் கேள்வி கேட்பார்கள்.

ஆகவே, அந்தப் பகுதிகள் பாதிக்கப்பட்டவுடன், உடனடியாக புயல் வந்த அன்றையதினம் அதிகாலையிலேயே நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

அதற்குப் பிறகு இரண்டு நாட்களில் அவர்களுக்கு என்னென்ன தேவை, அதிகமான மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதாகத் தெரிவித்தார்கள். உடனடியாக எங்கெங்கெல்லாம் பணியாளர்களை அனுப்ப முடியுமோ, அப்பகுதிகளுக்கு அனுப்பி வைத்ததோடு,

பல்வேறு மாவட்டங்களில், வெளி மாநிலங்களில் இருக்கின்ற மின்சார ஊழியர்களை எல்லாம், கிட்டத்தட்ட 13,300 பேரை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பியிருக்கின்றோம்.

அப்படி இந்தப் பணிகளை எல்லாம் செய்த பிறகு அங்கே சென்றால் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

கேள்வி:- மத்திய அரசிடம் உத்தேசமாக எவ்வளவு கேட்கலாம் என்று இருக்கின்றீர்கள்?
பதில்:- இன்னும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் ஹெலிகாப்டரில் செல்லும்பொழுது பார்த்ததில், வாழை மரம் முழுதும் ஒடிந்துள்ளது.

அதேபோல், தென்னை மரம் நிறைய இடங்களில் ஒடிந்திருக்கிறது. ஆங்காங்கே கிராமப் பகுதிகளில் நிறைய பாதிப்பு இருக்கின்றது. அதையெல்லாம், விடுபட்டுவிடாமல் துல்லியமாகக் கணக்கெடுக்கச் சொல்லியிருக்கின்றோம்.

கேள்வி:- வர்தா புயல் சேதத்திற்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் தான் மத்திய அரசு கொடுத்திருக்கிறது, ரூபாய் 28 ஆயிரம் கோடி இன்னும் வழங்கவில்லையே?
பதில்:- மாநில அரசைப் பொறுத்தவரைக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்,

அது விவசாயிகளாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி, சேதம் அடைந்ததை கணக்கிட்டு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்கின்றோம். அவர்களும் கொடுக்கின்றார்கள்,

சில சமயத்திலே, குறைவாக கொடுக்கின்றார்கள். நாம் கடந்த காலத்திலே கேட்டோம், குறைவாகத்தான் கொடுத்தார்கள்.

இப்பொழுதும் உயர் அதிகாரிகள் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நாளை மறுதினம் பாரதப் பிரதமரை சந்திக்க இருக்கின்றேன்.

அவரை சந்திக்கின்றபொழுது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சேதம் அடைந்தவைகளை கணக்கிட்டு அதற்குத் தேவையான நிதியை பிரதமரிடத்தில் கோருவோம்.

கேள்வி:- உங்களைப் பாராட்டிய எதிர்க்கட்சிகள், பின்பு அரசின் செயல்பாடுகள் மெத்தனமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள், மக்களும் சொல்கிறார்களே?
பதில்:- இது ஒரு இயற்கை சீற்றம். எதிர்க்கட்சித்தலைவர்கள் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள், அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.

ஆனால் முதலில் எப்படி பாராட்டினார்கள், நாங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தோம். புயல் குறைவாக வந்திருந்தால், இந்த சேதாரமே வந்திருக்காது.

ஆனால் புயல் கடுமையாக வீசிய காரணத்தினால், லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துவிட்டன. தென்னை மரம் மட்டும் 40 லட்சம் சாய்ந்துவிட்டதாக சொல்கிறார்கள், மாமரம், பலாமரம், அதுமட்டுமல்லாமல், இன்று வரை கிட்டத்தட்ட 1 லட்சம் மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன.

இன்னும் கிராமப்புறங்களில் சென்று பார்த்து கணக்கிடும் பொழுதுதான் முழுமையான சேதம் குறித்து கணக்கிட முடியும்.

அதையெல்லாம் கணக்கிட்டு பிறகுதான் சொல்லமுடியும். இருந்தாலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்திருக்கின்றன,

அதையெல்லாம் மாற்றவேண்டும். அதுவும் அது வயல் பகுதி, ஒரு வயல் பகுதியில் மின்கம்பத்தை நடவேண்டும் என்று சொன்னால், கிட்டத்தட்ட 16 பேர் அந்த மின்கம்பத்தை தூக்கிக் கொண்டு சென்று, வயலில் அந்த மின்கம்பத்தை நட்டுத் தான் மின்சாரத்தை கொடுக்க முடியும்.

இப்பொழுதுகூட இருவருக்கு ஜெனரேட்டர் ஓடும்பொழுது எலெக்ட்ரிக் ஷாக் அடித்துவிட்டது. ஆகவே, உயிரை பணயம் வைத்து நம்முடைய மின்சார ஊழியர்கள் பணி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், அவர்களை கொச்சைப்படுத்தக்கூடாது, மனசாட்சிப்படி அனைவரும் நடக்க வேண்டும்.

ஆகவே, மாண்புமிகு அம்மாவின் அரசைப் பொறுத்தவரைக்கும் வேகமாக, துரிதமாக இந்த நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைந்து முடித்து, மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும். இயல்பு வாழ்க்கை வரும் வரைக்கும் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

சென்னையில் அனைத்து தனியார் பள்ளிக்கும் நாளை கட்டாய விடுமுறை..

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் : சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு…

Recent Posts