முக்கிய செய்திகள்

முகமது அக்லக் படுகொலை – கோர முகத்தின் குறியீடு : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

Dadri lynching – hint of ugly face

_______________________________________________________________________________________________________

 

dadri lynchingபிரதமர் மோடி, நியூயார்க்கில் இந்தியாவுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே தருணத்தில் தான், டெல்லிக்கு மிக அருகே உள்ள பிஷாரா கிராமத்தில் அந்தக் கொடுமையான சம்பவம் அரங்கேறியது.

 

வெறும் சம்பவம் என்று மட்டும் அதனைச் சித்தரிக்க முடியுமா?

 

உ.பி. மாநிலம் நொய்டா மாவட்டத்தில் உள்ள பிஷாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்லக் சைபியும் அவரது குடும்பத்தினரும் பக்ரீத் பண்டிகை அன்று பசுவைப் பலி கொடுத்து கறிசமைத்து உட்கொண்டதாக வதந்தி பரவி உள்ளது. இதன் தொடர்ச்சியாக அங்கு வந்த சிலர், முகமது அக்லக்கையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதில் 52 வயது முகமது அக்லக் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இந்தக் கோர நிகழ்வு குறித்த தகவல்கள் ஊடகங்களைவிட சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

 

இது தொடர்பாக அக்டோபர் 3ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள சிவம், விஷால் இருவரும் கோர நிகழ்வை அரங்கேற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

 

இவர்களில் விஷால் என்பவர், உள்ளூர் பாஜக பிரமுகர் சஞ்சய் ராணா என்பவரது மகனாம். சஞ்சய் ராணா மத்திய பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு மிகவும் நெருக்கமானவர். கைது செய்யப்பட்டுள்ள விஷால் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றுவதாகத் தெரிகிறது. இவருடன் கைது செய்யப்பட்டுள்ள சிவம் என்ற இளைஞர் கல்லூரி மாணவர். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று பிஷாரா கிராமத்தில் உள்ள கோவில் பூசாரியை மிரட்டி, முகமது அக்லக்கின் வீட்டில் பசு பலி கொடுக்கப்பட்டதாக ஒலி பெருக்கியில் அறிவிக்கும்படி வற்புறுத்தி உள்ளனர். அந்தக் கோவில் பூசாரி இந்த உண்மையை உ.பி காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

 

இந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள ரூபேந்தர், சவ்ரவ் என்ற மேலும் இருவர் தலைமறைவாகி விட்டனர்.

 

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அக்லக்கின் மகன்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

பிஷாரா கிராமம் இருப்பது உத்தரப்பிரதேச மாநிலம் என்பதால், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி அரசின் மீது பழியைச் சுமத்திவிட்டு தப்பிக்கப் பார்க்கிறது பாஜக. ஆனால் அது இருப்பது நாட்டின் தலைநகரான டெல்லிக்கு மிக அருகில் என்பதை வசதியாக மறைத்துவிடுகிறார்கள்.

 

அந்தக் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மீதும், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீதும் பிசோதா கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தக் கிராமத்தில் உள்ள தாகூர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஊடகங்கள் ஒரு சார்பாகச் செய்தி வெளியிடுகின்றன என்பது அவர்களது குற்றச்சாட்டு. அதாவது கொல்லப்பட்டவர் குடும்பத் தரப்பு உணர்வுகளை மட்டும்தான் ஊடகங்கள் பிரதிபலிக்கின்றனவாம். படுகொலையை அரங்கேற்றியவர்கள் தரப்பு நியாயத்தை (?) ஊடகங்கள் கூறவில்லையாம். இப்படியும் ஒரு போராட்டம். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் அக்லக் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

 

இதன் மூலம் அக்லக் படுகொலைச் சம்பவம் மிகப்பெரிய அளவில் அரசியலாக்கப்படுவதாக உள்துறை இணையமைச்சர் கிரன் ரிஜ்ஜூ கொந்தளித்திருக்கிறார். மாட்டுக்கறி உட்கொண்டதாகக் கூறி ஒருவரை அடித்துக் கொல்வதும், மாட்டுக்கறிக்கு ஆங்காங்கே தடைவிதிப்பதும் அரசியல் இல்லையாம். அதைக் கண்டிப்பதும், விமர்சிப்பதும்தான் அரசியலாம். பாஜகவிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெரிந்ததுதான்.

 

வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் முதலீடு, கருப்புப் பண மீட்பு எனப் பலவாறாக ஊடகங்களின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினருக்கு எதிரான தங்களது சதுராட்டத்தை கச்சிதமாக ஆடிவருவதை இதில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

 

நாட்டின் வர்த்தகத் தலைநகரம் எனக் கருதப்படும் மும்பையை மையமாகக் கொண்ட மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மாட்டுக்கறி உண்ணத் தடைவிதித்ததன் மூலம் தன் மதவாதச் சதுராட்டத்தைத் தொடங்கிய பாஜக, இப்போது அதனை விரிவு படுத்தத் தொடங்கி இருப்பதன் அடையாளம்தான் பிஷாரா கிராமத்துச் சம்பவம். தமிழகத்திலும் கூட, அதிமுகவின் கடந்த (2001 – 2006) ஆட்சிக்காலத்தில் ஆடு, மாடு, கோழி வெட்டத் தடைவிதித்ததும், பின்னர் எதிர்ப்பு வலுத்ததை அடுத்து அந்த உத்தரவு திரும்பப் பெற்றதும் நினைவிருக்கலாம். எப்போதெல்லாம், எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தனது ஆளுகையை உறுதிப்படுத்த முனைவதுதான் இந்துத்துவ உளவியல்.

 

விளம்பர நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞன், கல்லூரி மாணவன் என இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் பட்டாளம் ஒன்று மாட்டுக்கறிக்கு எதிரான அதாவது மதவெறுப்பின் அடிப்படையிலான இந்தப் படுகொலைச் சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதை, வெறும் சட்டம் ஒழுங்கு தொடர்பான சம்பவமாகச் சித்தரிக்கப் பார்க்கிறது மத்திய அரசு. உ.பியின் அகிலேஷ் அரசிடம் அறிக்கை கேட்பதும், அது கிடைத்ததும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறுவதும் அத்தகைய முயற்சிதான்.

 

கார்ப்பரேட் விளம்பர உத்தியோடு நாட்டின் உயர் அதிகாரத்தை கபளீகரம் செய்துவிட்ட இந்துத்துவ சக்திகள், தங்களது பிரதான வேலைத்திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கி இருப்பதன் அடையாளமே அக்லக் படுகொலை.

 

இந்தியாவைப் பொறுத்தவரை, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆனாலும் இந்துத்துவ ஆளுகைக்குக் கட்டுப்பட்டுத்தான் அவை இயங்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்துவது ஒன்றும் பாஜகவுக்கு முடியாத காரியமல்ல.

 

மதச்சார்பின்மை என்பது இந்தியாவின் அடையாளமாகவும், ஆணிவேராகவும் தொடர வேண்டுமானால் ஜனநாயக சக்திகள் அதற்கான அழுத்தமான எதிர்வினைகளை ஆற்ற வேண்டிய தருணமிது.

 

இந்துமதத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மதவெறுப்புப் போதைக்கு அடிமையாக்கப் படுவதும், அதன் அடிப்படையிலான வன்முறைகளில் ஈடுபடுவதும் மிகப்பெரிய ஆபத்து. எனவே, இளைஞர்களை மத வெறுப்பு அரசியலின் பக்கம் சாயவிடாமல் காக்க வேண்டிய பெருங்கடமை, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது.

 

முதலீடுகள் குவியலாம். உள்கட்டமைப்பு வசதிகள் பெருகலாம். வறுமையும் கூட ஒழிந்துவிடக் கூடும். ஆனால், அனைத்து மதத்தினரும், வகுப்பினரும் அமைதியாக வாழக்கூடிய மண்ணாக இந்தியா தொடர வேண்டுமே… அதற்கு தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இந்துத்துவ சக்திகளும், அதன் வெகுசன அரசியல் அடையாளமான பாரதிய ஜனதா கட்சியும் ஒருபோதும் பயன்பட மாட்டா என்ற உண்மையை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

 

எண்ணெய் வளமும், இயற்கை வளமும், பொருளாதார வளமும் கொண்ட எத்தனையோ வலிமையான நாடுகள், பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்ட வெறுப்புணர்ச்சி வன்முறைகளால் சிதைந்து போனதையும், போய்க்கொண்டிருப்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.

 

எத்தனை பெரிய வளமும் வெறுப்புணர்ச்சி என்ற நெருப்பு பற்றி எரிந்தால், அதில் பொசுங்கிப் போய்விடும் என்ற பயங்கரத்தின் உண்மையை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

 

எத்தனை பெரிய வளர்ச்சியாக இருந்தாலும், அதற்கு விலையாக இந்தியாவின் அழகும், அடையாளமுமான மதச்சார்பின்மையை விலையாகக் கொடுக்க முடியாது.

____________________________________________________________________________________________________