டிசம்பர் 27, 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி திங்கள்கிழமை (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06-ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13-ஆம் தேதியும், வேட்புமனு ஆய்வு 16-ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப்பெறுவது 18-ஆம் தேதியும் நடைபெறும். வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 02.1.2020-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும். 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. முதல்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். 2-ஆம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்தல் நடவடிக்கை 04.01.2019-ஆம் தேதி முடிவடையும். வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள், கிராம உறுப்பினர்கள் 06.01.2019 அன்று பதவியேற்பார்கள். மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி ஆகியவற்றின் மறைமுக தேர்தல் 11.01.2020-ஆம் தேதி நடத்தப்படும்.

புதிய மாவட்டங்களைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்ற ஆணை உள்ளதால், ஏற்கனவே உள்ள நடைமுறை பின்பற்றப்படும். புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை தேவைப்பட்டால் தேர்தலுக்கு பின் நடத்தப்படும். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது.

நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.