முக்கிய செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐ.நா., சிறப்பு தபால்தலை வெளியீடு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டு உள்ளது.

இந்த தபால் தலையில், ஹேப்பி தீபாவளி என்ற வாசகத்துடன் மின்னொளியில் ஜொலிக்கும் ஐக்கிய நாடுகள் கட்டட படம் இடம்பெற்றுள்ளது.

கடந்த அக்., 19ம் தேதி இந்த தபால்தலை வெளியானாலும், தற்போது தான் ஐநா தலைமை அலுவலகத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும் கிடைக்கும்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறுகையில், தீபாவளி பண்டிகை மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒளி வழங்கும் விழாவாகவும், இந்தியா முழுவதிலும், உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

அந்நாளில், தீமை ஒழிந்து நன்மை வெற்றி பெறுவதை குறிக்கும் வகையில், விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இந்த நாளில் புது ஆண்டு பிறப்பதாக பல சமுதாய மக்கள் நம்புவதாக கூறியுள்ளது.

தபால் தலை வெளியிட்டதற்காக ஐநா.,வுக்கு, இந்திய தூதர் சையத் அக்பரூதீன் நன்றி தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கூறியதாவது:

தீபாவளியானது, இருளை அகற்றி, வெளிச்சம் வெற்றி கொள்ளும் நாளாக அமைந்துள்ளது. எந்தவித எதிர்பார்ப்பு, கட்டணம் இல்லாமல் சேவை ஆற்றுவதை இந்த நாள் குறிக்கிறது.

கெட்ட சக்திகளை அழித்து நல்ல எண்ணம் வெற்றி கொள்வதை குறிக்கும் வகையில், இந்த பண்டிகையை கொண்டாடும் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுவதாக கூறியுள்ளார்.