முக்கிய செய்திகள்

தீரன் சின்னமலை நினைவு நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய போது

தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். எம்எல்ஏக்கள் அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டுள்ள அறிக்கை

நாட்டுப்பற்றுக்கும் – வீரத்திற்கும் இன்றைக்கும் தமிழக இளைஞர்களுக்கு அடையாளமாக விளங்கும் தீரன் சின்னமலை நாட்டிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியது; பெருமைக்குரியது.
ஏழைகளுக்காக வரிப்பணத்தை வழிமறித்துக் கைப்பற்றிய போது,

“சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்” என்று துணிச்சலாகச் சொன்னவர்!
இளைஞர்களின் கனவு நாயகராகத் திகழும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுக்குப் பெருமை சேர்த்திட, சென்னை கிண்டியில் சிலை அமைத்தது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த கழக ஆட்சிதான்! நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டதும் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.

கொங்கு மண்டல இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு கொங்கு வேளாளர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே!
“மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்” என்ற தீரன் சின்னமலை அவர்களின் கனவை நனவாக்க திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதியை அவருடைய இந்த நினைவு நாளில் சபதமாக எடுத்துக் கொள்கிறேன். வாழ்க அவரது புகழ்!