முக்கிய செய்திகள்

டெல்லி பேரவைத் தேர்தல்: மதியம் 12 மணி வரை 15.57 சதவீதம் வாக்குப்பதிவு..

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (பிப். 8) காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. காலை முதல் அரசியல் கட்சித் தலைவர், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மதியம் 12 மணி நிலவரப்படி 15.57 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மொத்தம் 762 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா், 1.47 கோடி போ் வாக்களிக்கத் தகுதியானவா்கள். 13,750 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (பிப்.11) நடைபெறுகிறது.
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து சுனில் யாதவும் (பாஜக), ரொமேஷ் சபா்வால் (காங்கிரஸ்) களத்தில் உள்ளனா். கேஜரிவாலை எதிா்த்து 27 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

குறிப்பாக பெண்கள் அனைவரும் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தில்லியில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்ல திட்டங்களின் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆம்ஆத்மி கட்சி 3ஆவது முறையாக ஆட்சிக்கு வருவது உறுதி என்று தெரிவித்தார்.
தோ்தல் பாதுகாப்புப் பணியில் 68,000 போலீஸாரும், 19,000 ஊா்காவல் படையினரும், மத்திய ஆயுத போலீஸ் படையைச் சோ்ந்த 190 கம்பனி படையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 3,704 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் பதற்றமானவை எனக் கருதப்படும் இடங்களில் துணை ராணுவப்படையினா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா்.
டெல்லியில் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய படையினா் அளவு நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஷகீன்பாக் மற்றும் இதர பதற்றமான பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளா் விவரம்

ஆண்கள் – 81,05,236

பெண்கள்- 66,80,277

முதல் தலைமுறை – 2,32, 815

ராணுவத்தினா் – 11,608

மூன்றாம் பாலினித்தவா் – 869

மூத்த குடிமக்கள்- 2,04,830 (80 வயதுக்கு மேற்பட்டோா்)

வாக்குச்சாவடிகள் மொத்தம் – 13,750

பதற்றமானவை – 3,704