விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தரும் கனடா பிரதமர் : அழுத்தத்துடன் தொடங்கிய டெல்லி பேச்சுவார்த்தை…

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பிற்பகல் 3 மணியளவில் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார். இதில் 32 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

டெல்லி விஞ்ஞான் பவனில் உள்ள அரங்கில் இந்த கூட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தீவிரமாகி வரும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து வெளியிட்டிருக்கிறார்.
கனடாவில் சீக்கியர்கள் அதிகமாக வசிப்பதால், அவர்கள் நேற்று கொண்டாடிய குருநானக் ஜெயந்தியையொட்டி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு காணொளியில் பேசினார். அப்போது, இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக தகவல்கள் வருகின்றன. அங்குள்ள நிலைமை கவலையளிக்கிறது. நாங்கள் அனைவரும் குடும்பம், நண்பர்கள் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். உங்களில் பலருக்கும் நிஜமாகவே அப்படித்தான் இருக்கும். ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அமைதியாக நடக்கும் போராட்டங்களின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணையாக இருக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்டூடோ அந்த காணொளியில் பேசினார்.
இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் வெளிப்படையாக கருத்து வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், கனடா பிரதமரின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை எதிர்வினையாற்றியிருக்கிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரத் தொடங்கியதுமே இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்தியாவில் விவசாயிகள் தொடர்பாக கிடைத்த தவறான தகவல்கள் அடிப்படையில் கனடா நாட்டுத் தலைவர்கள் கருத்து வெளியிட்டதாக நாங்கள் பார்க்கிறோம். அத்தகைய கருத்துக்கள் தேவையற்றவை. அதுவும் அவை, ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பானவை. ராஜீய உரையாடல்கள், அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதே சிறந்ததாக இருக்கும்,” என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, டெல்லி புராரியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடந்து வருகிறது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார். இதில் 32 விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிராகி வருவதையடுத்து, டெல்லியை இணைக்கும் ஹரியாணா மாநில எல்லையை குருகிராம் அருகேயேும், உத்தர பிரதேசத்தை இணைக்கும் காஜியாபாத், நொய்டா எல்லைகளிலும் தடுப்புகளை போட்டு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

முன்னதாக, டெல்லி நோக்கி போராட்டம் நடத்தும் நோக்குடன் விவசாயிகள் நுழைவதற்கு நகர காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், நகர எல்லையில் திரண்ட விவசாயிகளின் கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை காவல்துறையினருக்கு ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான விவசாயிகள், டிராக்டர் வாகனங்களில் குடும்பம் குடும்பமாக திரண்டனர். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும்வரை போராட்டத்தை கைவிடக்கூடாது என்ற தீர்மானத்துடன் அவர்கள் காலவரையின்றி போராட்டங்களில் ஈடுபடும் எண்ணத்துடன் சமையல் பாத்திரங்கள், கூடாரங்களுடன் டெல்லிக்கு வர முற்பட்டனர்.

அவர்களை காவல்துறையினர் நகருக்குள் நுழைய அனுமதிக்காத நிலையில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கண்ணீர புகை குண்டுகளையும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் முற்பட்டனர். இந்த நடவடிக்கைகள் தேசிய கடுமையாக எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டன.
இதையடுத்து மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, டெல்லியின் புறநகர் எல்லையான புராரி நிரங்காரி மைதானத்தில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் திரண்டிருக்கிறார்கள். இந்த கூட்டம் அதிகமாவதையடுத்து, மீண்டும் டெல்லிக்குள் நுழைய முற்படும் வெளி மாநில விவசாயிகளுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலையில், தடுப்புகளை போட்டு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் கோபம் அடைந்த சில விவசாயிகள், தங்களுடைய டிராக்டர்களைக் கொண்டு தடுப்புகள் மீது மோதச் செய்து நகருக்குள் நுழைய முற்பட்டனர். இதனால் பல அடுக்கு தடுப்புகள் சாலை முழுவதும் போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இந்திய வேளாண்துறை அமைச்சர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து அவர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முன்னதாக, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆலோசனை நடத்தினார்.
நன்றி
பிபிசி தமிழ்

இந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சி: உயர் நீதிமன்ற கிளை வரவேற்பு..

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைகால தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Recent Posts