டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா அல்லது துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமா என்ற மோதல் இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.. அரசியல் சாசனத்தை மதிக்கும்படி நிர்வாகங்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை ஆளுநர்தான் பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுத்து வருகிறார். இதனால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது.
‘அமைச்சரவை எடுக்கும் எந்த முடிவையும் டெல்லி துணை ஆளுநர் செயல்படுத்த விடுவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார்’ என்று ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டியது. இதனால், டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என விளக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட்4-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர் எனத் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசுக்குள்ள அதிகாரம் தொடர்பான சட்ட மோதல்கள் இருந்து வரும் நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.