டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: வயல்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு..

தமிழ்நாட்டு விவசாய நிலங்களில் ஏராளமான உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக விவசாயிகள் டெல்லியில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்துகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் இந்தப் போராட்டத்தை உயர் அழுத்த மின்கோபுரங்கள், எரிவாயுக் குழாய் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது.

சுமார் 70 விவசாயிகள் தமிழகத்தில் இருந்து வந்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இங்கு போராட்டம் நடத்துகின்றனர்

போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.பலராமன், இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசினார்.

உயர் மின் கோபுரங்கள் எப்போதும்தான் அமைக்கப்படுகின்றன. அவை இப்போது ஏன் பிரச்சனையாகின்றன என்று கேட்டபோது,

“முன்பெல்லாம் 1-2 உயர் அழுத்த மின் பாதைகள் இருக்கும். இப்போது, அனல் மின்சாரம், அணு மின்சாரம், சூரிய விசை மின்சாரம், காற்றாலை மின்சாரம் என்று பல மூலங்களில் இருந்து, பல இடங்களில் இருந்து மின்பாதைகள் அமைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் இதுபோல 132 மின் பாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் ஏற்கெனவே 32 பாதைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அவற்றை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றன.

இத்தனை உயர் அழுத்தப் பாதைகள் வந்தால் ஏராளமான விவசாய நிலங்களை இது ஆக்கிரமித்துப் பாழாக்கும்” என்று கூறினார் பலராமன்.

இந்த உயர் அழுத்த மின்பாதை கோபுரங்களால் என்ன பிரச்சனை ஏற்படும் என்று கேட்டபோது, “இந்த உயர் அழுத்த மின்பாதை கோபுரங்களின் இருபுறமும் 20 மீட்டர் தூரத்துக்கு விளைச்சல் சரியாக இருக்காது.
கிணறு வெட்ட முடியாது, ஆழ்துளைக் கிணறு அமைக்க முடியாது. அந்த மின்கோபுரங்களின் அருகில் மின்சுமை கூடுதலாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, உயரழுத்த மின்கோபுரங்கள் அருகே மனிதர்கள் வெறுங்காலில் நின்றுகொண்டு குழல் விளக்கின் (டியூப் லைட்) முனைகளைக் கையால் தொட்டாலே விளக்கு எரிவதை சிலபேர் செய்துகாட்டியிருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு மின்சுமை இருப்பதால் உடல் நலன் பாதிக்கப்படுகிறது” என்று கூறினார் பலராமன்.
உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்குப் பதில் கேபிளாக அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்லவேண்டும் என்று விவசாயிகள் தீர்வு சொல்கின்றனர்.

கெயில் எரிவாயு, பெட்ரோலியம் போன்றவற்றை சாலையோரம் கொண்டு செல்லவேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.
பிரதமரை சந்தித்து மனு கொடுக்க முயற்சிகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வைகோ உள்ளிட்ட தமிழ்நாட்டு எம்.பி.க்கள் பலர் போராட்டத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்து பேசிவருகின்றனர்.

மலேசிய அரசு பொதுமன்னிப்பு: சட்டவிரோதமாக தங்கியுள்ள தமிழர்கள் வெளியேறுவார்களா?

புதுச்சேரி : உள்ளாட்சி தேர்தல் ஆணையர் நியமனம்..

Recent Posts