முக்கிய செய்திகள்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ..


உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் குழுவின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மசூத் உசேன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரையே பெரிதும் நம்பி இருக்கும் சூழ்நிலையில், ஆண்டுதோறும் கர்நாடக மாநிலத்தில் இருந்து உரிய தண்ணீரை பெறுவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர சட்டப் போராட்டத்தின் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கவேண்டும் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது
கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். புதுச்சேரியின் சார்பில் அந்த மாநில பொதுப் பணித்துறை செயலாளர் அன்பரசு கூட்டத்தில் பங்கு கொள்கிறார். இதற்காக நேற்று அவர்கள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இதேபோல் கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆணையத்தின் விதிகள், செயல்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும், ஆணையத்தின் வரவு-செலவு கணக்குகள், மாநிலங்களின் பொறுப்புகள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக அந்த கூட்டத்தின் அலுவல் திட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.

இன்றைய கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளன. இந்த மாதம் (ஜூலை) 30 டி.எம்.சி. தண்ணீரையும், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 50 டி.எம்.சி. தண்ணீரையும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படும். அத்துடன், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது தவறு என்பதை சுட்டிக்காட்டவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தங்கள் மாநில பிரச்சினைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் எடுத்துரைப்பார்கள் என்று தெரிகிறது. இதேபோல் கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளும் தங்கள் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவிப்பார்கள்