நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தன. கூட்டம் தொடங்கியது முதலே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் பெகாசஸ் உளவு சர்ச்சை, வேளாண் சட்டங்கள் ரத்து, பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவிருந்த கூட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்படுவதாக கூறி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்ததை எதிர்த்து, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றும் பெகாசஸ் உளவு சர்ச்சை குறித்து விவாதிக்கவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதுதொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறுகையில், ”நாடாளுமன்றத்தில் பெகாசஸ், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்னைகள் பற்றி மத்திய அரசு விவாதிக்க மறுத்ததை மக்களிடம் தெரிவிக்கவே இந்த பேரணி நடத்தப்படுகிறது” என்று கூறினார்.
திமுக எம்பி திருச்சி சிவா கூறுகையில், ”எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்றம் செயல்படாததற்கு ஆளும் பாஜகவே காரணம்” என்று குற்றஞ்சாட்டினார்.