முக்கிய செய்திகள்

பணமதிப்பிழப்புக்கு எதிராக​ திமுக நடத்தும்​ போராட்டத்துக்கு மதுரை காவல்துறை அனுமதி மறுப்பு..


மதுரையில் பணமதிப்பிழப்புக்கு எதிராக திமுக நடத்தயிருந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளது. பணமதிப்பிழப்புக்கு எதிராக நாளை திமுக போராட்டம் நடத்த இருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை அண்ணா நகர் பகுதியில் போராட்டம் நடத்தாமல் பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை
முன்னதாக திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில்: மத்திய பாஜ அரசை கண்டித்து நவம்பர் 8ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பணமதிப்பிழப்பு தினம் ‘கறுப்பு தினமாக’ அனுசரித்து நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகிப்போர் விவரம்
மதுரையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் முதன்மை செயலாளர் துரைமுருகன், திண்டுக்கலில் துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, நாமக்கலில் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, திருப்பூரில் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருநெல்வேலியில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, கோவையில் கனிமொழி எம்பி, தஞ்சாவூரில் டி.ஆர்.பாலு, சேலத்தில் திருச்சி சிவா எம்பி, ஈரோட்டில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்பி, மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டக் திமுக செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பேட்ஜ்
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வணிக பெருமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘‘கருப்பு பேட்ஜ்’’ அணிந்து பெருமளவில் கலந்து கொள்ளச்செய்து, இப்போராட்டத்தை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.