பொருளாதாரத் தடையில் இருந்து ஈரான் துறைமுக மேம்பாட்டுப் பணிக்கு விலக்கு: இந்தியா, ஆப்கானிஸ்தான் நிம்மதி

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையில் இருந்து, இந்தியாவின் உதவியுடம் மேற்கொள்ளப்பட இருக்கும் சபாஹார் (Chabahar port) துறைமுக மேம்பாட்டுப் பணிக்கு மட்டும் விலக்களிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கம், ஆப்கானிஸ்தானுக்கும் ஆறுதல் அளித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரானுடன், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் இணைந்து அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டன. ட்ரம்ப் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், ஒப்பந்தத்தை மீறி ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. இதன் தொடர்ச்சியாக ஈரானிடம் இருந்து உலகநாடுகள் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா தடை விதித்தது. அத்துடன், கடுமையான பொருளாதாரத் தடைகளையும் ஈரானுக்கு அமெரிக்கா விதித்தது.

கடந்த 4ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள இந்தத் தடையில் இருந்து, இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, துருக்கி, இத்தாலி, கிரீஸ், தைவான் ஆகிய 8 நாடுகளுக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறினார். கடந்த 6 மாதங்களில் ஈரானிலிருந்து இறக்குமதியை இந்த நாடுகள் குறைத்துள்ளதாகவும், இதன் காரணமாக, 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஈரானில் இந்தியாவின் நிதியுதவியுடன் சபாஹர் துறைமுகத்தை மேம்படுத்தும் பணிக்கும் பொருளாதாரத் தடையில் இருந்து விலக்களிப்பதாக தற்போது அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரானின் சபாஹர் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்திற்கு, இந்தியா சுமார் 3,600 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அது மட்டுமின்றி, ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் இருந்து, ஆப்கானின் ஹாஜி காஜ் வரை ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு சுமார் 14 ஆயிரம் கோடியை வழங்கவும் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை அமைக்கப்படும் இந்த ரயில்பாதை, எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு செல்லாமலேயே இந்தியாவையும் இணைக்கும் திட்டத்துடன் உருவாக்கப்படுகிறது. மத்திய ஆசியாவை இணைக்கும் முக்கிய ரயில்பாதையாகவும் இது இருக்கும் என்பதால், இந்தியா இதில் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தத் திட்டத்திற்கு மட்டும் அமெரிக்கா விலக்களித்திருப்பது, இந்தியாவையும், ஆப்கானிஸ்தானையும் நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளது. ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு உதவும் திட்டம் என்பதால் தடைகளில் இருந்து சபாஹர் துறைமுக மேம்பாடு மற்றும் ரயில்வே பாதைத் திட்டத்திற்கு விலக்களித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

 

Development of the Chabahar port in Iran will be exempt from U.S sanctions