முக்கிய செய்திகள்

பெரியாரைப் பேசினால் அரசியல்… ஆர்எஸ்எஸ் சார்பாகப் பேசினால் அறிவு ஜீவியா?

கேள்வி: பெரியாரிய, அம்பேத்கரிய அரசியல் பேசினால் உடனே அரசியல் பேசாதே என்றோ, நீ இந்த கட்சிக்காரன் அந்த கட்சிக்காரன் என முத்திரை குத்தவோ செய்கிறார்கள். ஆனால் இந்துத்துவ அரசியல் பேசினாலோ, RSS அரசியல் பேசினாலோ அறிவுஜீவி, சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர் என்றெல்லாம் புகழ்கிறார்களே என்ன கணக்கு இது?

பதில்: இதற்கு ஒரு உதாரணத்துடன் பதில் சொல்கிறேன். சுஜாதாவுக்கு திராவிட இயக்கத்திலேயே கூட நிறைய ரசிகர்கள் உண்டு. இருக்கலாம். தவறில்லை. “அண்ணாவின், கலைஞரின் இலக்கியங்கள் எல்லாம் இலக்கியமா என மனசாட்சியே இல்லாமல் கேள்வி கேட்கும் சாதிவெறி அவர்களிடம் இருக்கலாம். ஆனால் நாம் யாருடைய படைப்பையும் அவர்களின் பிறப்பால் எடை போடுகிறவர்கள் அல்ல.

சோ ஆகட்டும், சுஜாதா ஆகட்டும், அவர்களின் அரசியல் பார்வை மட்டும் ஏன் நடுநிலை என்றே பொதுச்சமூகத்தில் விவாதிக்கபடுகிறது? இரண்டு படங்களில் கதையினூடே தலித்தியம் பேசினால் ரஞ்சித் உடனே தலித்திய இயக்குனர் என முத்திரை குத்தப்படுகிறார். சுசீந்திரனுக்கும் குத்துகிறார்கள். ஆனால் சுஜாதா போன்றோர் மட்டும் எப்படி “அவரு அறிவுஜீவிப்பா… புத்திசாலிப்பா… எல்லாமே தெரியும்பா… அவரு கிளாஸே வேறப்பா.. ” என புகழப்படுகிறார்?

இந்தியன் படத்தின் முதல் காட்சியில் முதல் வசனமே, “உள்ள போ. வைதேகி மாமினு ஒருத்தங்க இருப்பாங்க. அவங்ககிட்ட 10ரூ மட்டும் கொடுத்தீனா ஃபார்ம் கொடுப்பாங்க. அப்புறம் பியூன் ஒருத்தன் இருப்பான். அவன்கிட்ட 100ரூ தந்தீனா வேலையை முடிச்சுகொடுப்பான்.” எப்படி? வைதேகி ‘மாமி’ அப்பாவி. அவர் லஞ்சம் வாங்கமாட்டார். அந்த பியூன் குப்புசாமியோ, முனுசாமியோதான் லஞ்சம் வாங்குவான். அடுத்து இந்தியன் தாத்தா கொலை செய்கிறார். கொலையாகும் அதிகாரி பெயர் ‘ஜேம்ஸ் அப்பாதுரை’. அடுத்து RTO அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதை ஒரே ஒருவர் மட்டும் தட்டிக் கேட்கிறார். அவர் பெயர் பார்த்தசாரதி!! இப்படியே தான் படம் முழுக்க இருக்கிறது. ஆஹா. எவ்வளவு அப்பாவியான சமூகம்!

இதையெல்லாம் விட உச்சகட்டம் முதல்வன் படத்தில், அர்ஜூனின் அப்பா “நீ ராஜாஜி மாதிரி நல்ல முதல்வரா வருவடா,” என வாழ்த்துவது!! ராஜாஜி முதல்வராக இருந்ததே சொற்ப காலம். அதிலும் அத்தனை ஆயிரம் பள்ளிகளை மூடி குலக்கல்வி திட்டத்தைக் கொணர்ந்த மகத்தான மகான். அவர் போல வரவேண்டுமாம்!!! இதைவிட பச்சையாக யாரால் அரசியல் பேச முடியும்?”

ஆனால் நாம் அரசியல் பேசினால், “அரசியல் எல்லாம் சாக்கடை,” என சொல்லிவிட்டுக் கடப்பார்கள். அவர்கள் பேசினால், “ஆஹா அறிவுஜீவி. என்னம்மா பேசுறார்,” என வியப்பார்கள்.

சமூகத்திற்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்த பெரியாரின் பெயரையோ, அண்ணாவின் பெயரையோ அரசியல் முத்திரை விழுந்து விடுமோ என்கிற பயத்தில் நம் ஆட்கள் பொதுமேடைகளில் சொல்வதையே தவிர்ப்பார்கள். ஆனால் அவர்களோ கூச்சமே இல்லாமல் பிஞ்சுகளின் படிப்பில் நெருப்பை வைத்த ராஜாஜியை வெகுஜன சினிமாவில் புகழ்ந்து அறிவுஜீவி என்ற பட்டத்தையும் தட்டிச் செல்வார்கள். என்னிடம் எத்தனையோ மேல்தட்டு நண்பர்கள், “நல்லா எழுதுற. பெரியாரை பேசாம இருந்தீனா பெருசா ஜெயிக்கலாம். இல்லேன்னா அரசியல் முத்திரை விழும்,” என ‘அறிவுரை’ சொல்வார்கள். சுஜாதா அஞ்சாமல் ராஜாஜியை பேசும்போது நாம் ஏன் பெரியாரை பேச அஞ்ச வேண்டும்?

இது அவர்கள் காலம்காலமாக நம் அரசியல் மீது நடத்தும் உளவியல் போர். இதைத்தான் முதல் ஆயுதமாக நம் அரசியலைப் பேசும் இளைஞர்கள் மீது பயன்படுத்துவார்கள். இந்த ஆசைவார்த்தைக்கு மயங்காமல், அச்சுறத்தலுக்கு பயப்படாமல் தாண்டி மீண்டு வருவதில்தான் நம் இளைஞர்களின் அரசியல் வெற்றியும், தன்மானமும் இருக்கிறது.

– சமூகவலைத் தளங்களில் வலம் வரும் பதிவு…

difference in visions on Periyar And Hindutva