தினகரனுக்கு குக்குர் சின்னம் கிடையாது: பொதுச் சின்னம் வழங்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்..

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்கமுடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில்,

தேர்தலைக் கருத்தில் கொண்டு அமமுகவுக்கு பொதுச் சின்னம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தினகரன், சசிகலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

தினகரன் தனது மனுவில், ”இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

அதுவரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். தேர்தலை சந்திப்பதற்கு ஏதுவாக எங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதுதொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) பதிலளித்த தேர்தல் ஆணையம்,

தினகரனின் அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதால், அவர்களுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் நடைபெற்றது. அப்போது பேசிய தேர்தல் ஆணையம்,

”டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை முறையாகப் பதிவு செய்யவில்லை. பதிவுசெய்த பட்சத்தில் ஒரு மாதம் கழித்துதான் சின்னத்தை ஒதுக்கமுடியும்.

இதனால் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கமுடியாது” என்று தெரிவித்தது.

டிடிவி தினகரன் தரப்பில் வாதிடும்போது, ”குக்கர் சின்னத்தை ஒதுக்காவிட்டால், பொதுச்சின்னம் எதையாவது கொடுங்கள்” என்றனர்.

ஆனால் தேர்தல் ஆணையம்,”அமமுகவை சுயேச்சையாகவே கருதுகிறோம். அதனால் தனிச் சின்னங்களைத்தான் வழங்கமுடியும். பொதுச்சின்னத்தை வழங்க சட்டத்தில் இடமில்லை” என்று தெரிவித்தது.

எனினும் இதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றம், ”குறுகிய காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் சட்டப்பேரவை இடைத் தேர்தலும் வர உள்ளன.

ஒருவர் எத்தனை வலிமையாக இருந்தாலும் சின்னம்தான் அவரின் அடையாளம். அதனால் அமமுகவுக்கு பொதுச் சின்னத்தை வழங்குவது குறித்துப் பரிசீலியுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளது.