திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரிச்சோதனை

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.

தனது மகன் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக சிலர் செய்த சூழ்ச்சி இது என துரைமுருகன் சாடியுள்ளார்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் சென்றுள்ளனர்.

அப்போது சோதனை நடத்துவதற்கான அனுமதி உள்ளதா? என்று வழக்கறிஞர்கள் கேட்கவே, அவர்கள் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அதிகாலை 3 மணி அளவில் தேர்தல் பறக்கும் படையினருடன் அவர்கள் சென்று உரிய ஆவணங்களை காட்டி சோதனை மேற்கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

துரைமுருகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கார் ஷெட் மற்றும் கார்களில் அவர்கள் சோதனை நடத்தினர்.

காலையில் அவர்கள் சோதனையை முடித்து விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தனது மகன் கதிர் ஆனந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால் அதை தடுக்கவே, அதிகாரிகளை விட்டு சிலர் முதுகில் குத்த பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.

வருமான வரிச்சோதனை நடத்துவதற்கு தாங்கள் ஒன்றும் கார்ப்போரேட் கம்பெனி நடத்தவில்லை என்றும் துரைமுருகன் கூறினார்.

இதனிடையே சித்தூர் மெயின் ரோட்டில் உள்ள கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியிலும் சோதனை நடந்துள்ளது.

இதேபோல் குடியாத்தம் அடுத்த அனங்காநல்லூரில் உள்ள தி.மு.க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சக்கரவர்த்தி என்பவரது வீட்டிலும் வருமான வரிச்சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

சோதனையில் 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.