திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்ரமணியன் உடல்நலக் குறைவால் மரணம்…

திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்ரமணியன் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். இவர், 1989ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கலைஞருக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்ட சிவசுப்ரமணியன் 1998-2004ல் திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தேவனூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (81). எம்ஏபிஎல் பட்டதாரியான இவர் திமுக சார்பில் 1998ம் ஆண்டு மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989ல் ஆண்டிமடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1971, 1986ம் ஆண்டுகளில் ஆண்டிமடம் ஒன்றிய குழு தலைவராகவும் இருந்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் பதவியும் வகித்து வந்தார். தற்போது திமுகவில் சட்ட திருத்தக் குழு உறுப்பினராக இருந்தார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, பொது செயலாளர் அன்பழகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் நெருக்கமாக பழகியவர் சிவசுப்பிரமணியன். இவருக்கு மனைவி சிவ ராஜேஸ்வரி , மகன்கள் சிவசங்கர், சிவகுமார் உள்ளனர்.

சிவசங்கர் குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ. தற்போது அரியலூர் மாவட்ட திமுக செயலாளராக உள்ளார்.

சிவசுப்பிரமணியன் கடந்த 2 ஆண்டாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அரியலூரில் உள்ள தனது மகன் சிவசங்கர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்து வந்தார்.

இன்று காலை 8 மணியளவில் உடல்நிலை மோசமானதால் அவரை அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, சிவசுப்பிரமணியன் உடல் ஆண்டிமடம் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் உள்ள இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து இன்று மாலை உடல் சொந்த ஊரான தேவனூர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை காலை 10 மணியளவில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.