தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

(21-1-2020)

தீர்மானங்கள்

தீர்மானம் : 1

உள்ளாட்சி மன்றத் தேர்தலில், மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி!

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மகத்தான ஆதரவினையும் – மாபெரும் வெற்றியையும் வழங்கிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இந்த செயற்குழு கூட்டம் தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 512-ல் கழகம் 242 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளுடன் 266 வார்டுகளிலும் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய வார்டு பதவிகளில் 5076-ல் கழகம் 2090 வார்டுகளிலும், கூட்டணிக் கட்சியுடன் சேர்த்து 2,318 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

“மாநிலத் தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆளும் அதிமுக நேரடியாகக் கூட்டணி வைத்து”, “நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்த உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அளித்த தீர்ப்புகளை எல்லாம் மீறி”- “அராஜகத்தில் ஈடுபட்டு”- “வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை பல இடங்களில் மறு வாக்கு எண்ணிக்கை என்ற பெயரில் தோல்வியடைந்ததாக அறிவித்து” அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டாலும், இவற்றையெல்லாம் மீறிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது, உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் ‘புதியதொரு அத்தியாயமாக’ அமைந்திருக்கிறது.

ஆளுங்கட்சியே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் என்ற மாயை மடிந்து – கழகம் பெற்ற இந்த குறிப்பிடத் தகுந்த வெற்றிக்கு இரவுபகல் பாராமல் உழைத்த, கழக உடன்பிறப்புகளுக்கும் – செயல்வீரர்களுக்கும் – கூட்டணிக் கட்சிகளின் தோழர்களுக்கும் – ஒருமுறைக்கு இருமுறை, நள்ளிரவிலும்கூட, மாநிலத் தேர்தல் ஆணையரை நேரில் சென்று சந்தித்து, அதிமுகவின் தேர்தல் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து முறையிட்ட கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், இந்த செயற்குழுக் கூட்டம் தனது மனம் நிறைந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

கழகத்தின் சார்பில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களும் – துணைத் தலைவர்களும் – வார்டு உறுப்பினர்களும் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கழகத்தின் அடிப்படை முழக்கத்தை மனதிலிருந்து அகலாமல் நிலை நிறுத்திக்கொண்டு – நேர்மையான, திறமையான, வெளிப்படையான தங்களது பணிகளின் மூலம் மக்களுக்கு நல்லதொரு உள்ளாட்சி நிர்வாகத்தினை அளித்திட வேண்டும் என்று இந்த செயற்குழு வாழ்த்தி- வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 2

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தலை உடனே நடத்திடுக!

திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, “9 மாவட்டங்களில் மூன்று மாதங்களுக்குள் முறையான வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடுகள் பணிகளை முடித்து ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதை அலட்சியப்படுத்தியும், மீறும் வகையிலும் – தேர்தல் நடைபெறாத உள்ளாட்சி அமைப்புகளில், மேலும் ஆறு மாதங்கள் தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீடித்திருக்கும் அதிமுக அரசுக்கு, இந்த செயற்குழுக் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முழுவதையும் மதித்து – மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலையும், அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலையும் உடனடியாக நடத்திட வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3

“தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்க அனுமதிக்க மாட்டோம்” என அறிவித்திடுக!

அரசியல் சட்டத்திற்கு விரோதமான – நாட்டின் பன்முகத்தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் 2019-ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வாக்களித்திடச் செய்து – மாநில மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்திடும் வகையில், மாபெரும் பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஈழத்தமிழர்களையும், சிறுபான்மையின மக்களையும் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும் நெருக்கடியையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் 2019-ஆம் வருட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாராளுமன்ற கூட்டுக்குழு – மக்களவை – மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களித்து அதன் காரணமாகவே வெற்றிபெற வைத்து, நாட்டிலுள்ள மாணவர்களை போராட்டக் களத்தில் தள்ளியுள்ள அ.தி.மு.க. அரசுக்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

“மக்களுக்கு பாதிப்பு இல்லை” என்று தொடர்ந்து மக்களை திசை திருப்பி – பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ள நேரத்திலும், கேரளா மாநில அரசு குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சூழ்நிலையிலும் கூட, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் (NPR), தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (NRC) கண்மூடித்தனமாக அ.தி.மு.க. அரசு ஆதரவு அளித்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கேரளா, பஞ்சாப் மாநில சட்டமன்றங்கள் தீர்மானமே நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தனிநபர் தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் ஏற்க மறுத்து, தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. அரசு மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தயாரிப்பதற்கான புதிய படிவங்களில் உள்ள கேள்விகள், “குடிமக்களை சந்தேகத்திற்கு உரியவர்களாக பதிவு செய்யலாம்” என்று மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், தகவல் அளிக்காதோர் மீது வழக்குப் போடும் அதிகாரம் அனைத்தும் நேர்மையானதொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அறிகுறிகளாக இல்லை என்பது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க.விற்கு தெரிந்திருந்தும் –

மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தி, அனைத்து தரப்பு மக்களையும் துயரத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளாக்கும் பா.ஜ.க.வின் செயலுக்கு உள்நோக்கத்துடன் துணை போவது மன்னிக்க முடியாத மாபாதகம் என்று இந்த செயற்குழு, அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது.

ஆகவே, தமிழக மக்கள் நலன் கருதியும், தேசிய ஒற்றுமை – ஒருமைப்பாடு கருதியும் “தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்” என்று உடனடியாக அ.தி.மு.க. அரசு அறிவிக்க வேண்டும் என்றும்; திருத்தச் சட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியான பதிவேடுகள் குறித்து விதண்டா வாதங்களைப் பேசும் வக்கணைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும்; இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 4

“இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை” என்ற அதிமுக அரசின் வஞ்சக நாடகத்திற்குக் கண்டனம்!

2003 மற்றும் 2019 குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு மற்றும் கூட்டுக் குழுக்களில் எல்லாம் பங்கேற்றிருந்த அதிமுக, இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை குறித்தோ, இரட்டைக் குடியுரிமை குறித்தோ எந்தக் கட்டத்திலும் எதுவுமே பேசவில்லை. 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அதிமுக ஆதரவளித்த பிறகு, திடீரென்று “இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம்” என்று ஒரு கபட நாடகத்தை அதிமுக அமைச்சர்களும், முதலமைச்சரும் அரங்கேற்றி ஏமாற்றி வருகிறார்கள். இந்த சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, இந்தியக் குடியுரிமை கோரி இந்திய வம்சாவழியினர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், “1955-ஆம் வருட இந்திய குடியுரிமை சட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது. ஆகவே ரிட் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டது இதே அதிமுக அரசும், மத்திய பா.ஜ.க. அரசும்தான். “தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய குடியுரிமை சட்டத்தில் இடமில்லை” என்று மத்திய பா.ஜ.க. அரசு உயர்நீதிமன்றத்திலேயே கூறிவிட்ட நிலையில், “இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம்” என்று இலங்கைத் தமிழர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசுக்கு இந்த செயற்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 5

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு “இந்தியக் குடியுரிமை” வழங்கிடுக!

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறையும், ஆர்வமும் கொண்டிருக்கிறது. கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரங்களில் எல்லாம், தமிழக மக்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவி, திருமண நிதியுதவி, மருத்துவக் காப்பீடு, குழந்தைகளின் கல்வி உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்து – முகாம்களில் தங்கியிருக்கும் அவர்கள் கண்ணியமாக வாழ்வதற்கு வழி வகுத்ததை இந்த செயற்குழு மன நிறைவுடன் நினைவு கூர்கிறது.

முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் ஆணையின் பேரில் – தமிழ்நாடு முழுவதும் உள்ள முகாம்களில், துணை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக அமைச்சர்கள் ஆய்வு செய்து அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியது கழக அரசு என்பதை இந்த செயற்குழு பதிவு செய்கிறது.

“தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்” என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு. அதை நிறைவேற்ற தொடர்ந்து மத்திய அரசை கழகம் வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவில் பேசிய போதும் இதை ஆணித்தரமாக கழகம் வலியுறுத்தியிருப்பதை இந்த செயற்குழு பதிவு செய்து, இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும், அவர்தம் விருப்பத்தின் அடிப்படையில், எவ்வித காலதாமதமும் இன்றி இந்தியக் குடியுரிமை வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. அதிமுக அரசு, இரட்டைக் குடியுரிமை பற்றிப் பேசும் தமது இரட்டை நாக்குப் போக்கைக் கைவிட்டு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 6

அதிமுக அரசின் அடுக்கடுக்கான தோல்விகள்!

மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க.வின் முகமூடியைக் கிழித்தெறியச் சபதமேற்போம்!

அ.தி.மு.க. அரசின் அடிமைத்தனத்தால் தமிழக உரிமைகள் எல்லாம் பறிபோவதுடன் – நிதி, நிர்வாகம் அனைத்திலும் தேக்க நிலைமை உருவாகி – ஒட்டுமொத்த மாநிலமே வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் ஸ்தம்பித்துத் தள்ளாடுகிறது.

இன்றைக்கு அதிமுகவின் அராஜக ஆட்சி :

* 2600 ஆண்டுகள் பழமைமிக்க தமிழர்களின் நகர நாகரிகத்தின் ஆதாரங்கள் கீழடியில் கிடைத்தும், அங்கு ஆறாவது கட்ட அகழாய்வை தமிழக அரசு தாமதிக்கிறது.

* “நீட்” தேர்வை ரத்து செய்வதற்கு உறுதியான மனப்பூர்வமான முயற்சிகளை எடுக்காமல், காலம் தாழ்த்தி வழக்குப் போட்டு, நாடகம் ஆடி ஏமாற்றி, மாணவ மாணவியரின் மருத்துவக் கனவுகளை சிதைக்கிறது.

* ஹைட்ரோ கார்பனுக்கு “சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை” என்ற மத்திய அரசின் உத்தரவை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லாமல், மாநில அரசே செய்ய வேண்டியதைச் செய்யாமல், மத்திய அரசிடம் மண்டியிட்டு, கடிதத்துடன் கையேந்தி நிற்கிறது.

* ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்கு முயற்சிக்காமல், 13 அப்பாவிகளைச் சுட்டுக் கொன்று, அதிலும் நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறது.

* 48,738 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெறும் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைத் துவங்கப் போகிறோம் என புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் “நாடகம்” ஒன்றை அரங்கேற்றி – லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கவும், வாழ்வாதாரம் தேடி பிற மாநிலங்களுக்கு ஓடவும் செய்துள்ளது.

* 22,560 சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைத் துவங்கப் போகிறோம் என்று வெற்று அறிவிப்பு செய்துவிட்டு- ஆயிரக்கணக்கான சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை இழுத்து மூடிவிட்டது.

* தொடர்ந்து ஏறிவரும் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஏன் என்று தட்டி கேட்க முடியாமல், கைபிசைந்து நிற்கிறது.

* தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் க்ரூப்-4 தேர்வுகள் உள்பட பல தேர்வுகளில் வரலாறு காணாத குளறுபடிகளை உருவாக்கி, தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையினை பாழ்படுத்தி விட்டது.

* 1500 கோடி ரூபாய்க்கு மேலான நீண்ட கால நிலுவைத் தொகையால், கரும்பு விவசாயிகளை தீராக் கவலையில் தள்ளியுள்ளது.

* “கஜா” புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு முழுமையாக நிவாரணம் அளிக்காமல், தென்னை விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளது.

* அமைச்சர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் எதிர்ப்பு வழக்கு விசாரணைகளில், கூச்சமே இன்றி நேரடியாகத் தலையிடுகிறது.

* 1.50 லட்சம் கோடி கடனுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் திவாலாகி மூழ்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது.

* 14,314.76 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையில் தமிழகம் வழிதவறித் திண்டாடுகிறது.

* 44,176.36 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையில் நிதிநிலைமை திசைமாறித் திணறுகிறது.

* மக்கள் தலையில் 3,97,495.96 கோடி ரூபாய் கடனைச் சுமத்திக் கலக்கம் அடைய வைத்திருக்கிறது.

* ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரின் கோரிக்கைகளையும் காது கொடுத்துக் கேட்காமல், கண்ணெடுத்துப் பார்க்காமல், அலட்சியப்படுத்தி – அல்லல்படுத்தி அராஜகம் செய்கிறது.

* காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத பரிதாப நிலையில் மாநில சட்டம் – ஒழுங்கு படுதோல்வி கண்டிருக்கிறது.

* தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கிப் பரவிட அனுமதித்து விட்டது.

* ஆவின் பால் விலையை உயர்த்திய அரசு – இப்போது தனியார் பால் விலை உயர்வையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து – ஏழை எளிய மக்களை, குழந்தைகளை, முதியோரை துயரத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

* வேலை இல்லாத இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதில் அகில இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடம் என்ற மிகுந்த அவல நிலையை உருவாக்கியுள்ளது.

* 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று பள்ளி மாணவர்களின் எதிர்காலத்துடன் விபரீத விளையாட்டு நடத்துகிறது.

* குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஜனநாயக ரீதியில் அமைதியான அறப்போராட்டங்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், மக்கள் மீது அநியாயமாக வழக்கு – அடக்குமுறை ஏவிவிடப்படுகிறது.

* புத்தகக் கண்காட்சியில் கூட அச்சிடப்பட்ட புத்தகங்களை விற்க விடாமல், கருத்துச் சுதந்திரத்தின் கதவைச் சாத்தி, போலீஸ் மூலம் அடக்குமுறை ஆணவம் படமெடுத்தாடுகிறது.

* உள்ளாட்சித் தேர்தலில் ஊரறிய அராஜகமும், அதிகார துஷ்பிரயோகமும் செய்து – தேர்தல் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்துவிட்டது.

இவை போன்ற எண்ணற்ற தோல்விகளால், மாநிலத்தின் நலனும் – வளர்ச்சியும் – வாழ்வும் குன்றிவிட்டன.

எனவே, மக்கள் விரோத – தமிழக உரிமைகளை சுய லாபத்திற்காகத் தாரை வார்க்கிற – ஊழல் சகதியில் மூழ்கிக் கிடக்கின்ற அதிமுக அரசின் முகமூடியை, மக்கள் மன்றத்தில் தோலுரித்து, அதன் மோசடி சொரூபத்தை ஊரெங்கும் உணர்த்திட இந்தச் செயற்குழு சபதம் ஏற்கிறது!