முக்கிய செய்திகள்

திமுக குடும்ப கட்சிதான் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..

திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். அதில்..

என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பாசமிகு மடல்.

பொது வாழ்வில் – அரசியல் வாழ்வில் மகிழ்ச்சித் தென்றலும், நெருக்கடிப் புயலும் மாறி மாறி வந்து போகும்; எதுவும் நிரந்தரமில்லை என்கிற வாழ்வில், தொண்டர்களின் பாச உணர்வலைகள் மட்டும் ஓயாது கரையேறிச் சுற்றிச் சுழன்று கொண்டேயிருக்கும் என்பதை கடந்த சில நாட்களாக உவகை மேலிடக் காண்கிறேன். ஆம்.. கழக நிர்வாகிகளுடனான ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது; தொய்வின்றித் தொடர்கிறது; துவளும் நெஞ்சங்களுக்கும் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கிறது!

கழக நிர்வாகத்திற்காக உள்ள 65 மாவட்டங்களில், இதுவரை 22 மாநகர் மற்றும் மாவட்டங்களைச் சார்ந்த நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் – ஊராட்சி – வட்ட கழக நிர்வாகிகளையும், கழகத்தின் துணை அமைப்பின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களையும் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துள்ளேன்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊராட்சி, பேரூர் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் தனி அமர்வாகவும்; அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களை மற்றொரு அமர்வாகவும்; மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி கழக நிர்வாகிகள் இன்னொரு அமர்வாகவும் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு மாவட்டங்களைச் சார்ந்த பலதரப்பட்ட நிர்வாகிகளைச் சந்திப்பதுடன், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பொறுப்பாளர்களை யும், மூத்த முன்னோடிகளையும் சந்தித்து அவர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்து மகிழ்கிறேன். சந்திப்பு என்பதைவிட உணர்வுகளின் சங்கமம் என்பதே சாலப் பொருத்தமானதாகும்.

 

கழகத்தினரின் திருமுகங்களை மாநாடுகளில் கண்டிருக்கிறேன், பொதுக்கூட்டங்களிலும் தேர்தல் பரப்புரைகளிலும் பார்த்திருக்கிறேன். கழகத்தினர் நடத்தும் இயக்க நிகழ்வுகளிலும் – இல்ல நிகழ்வுகளிலும் பலரையும் நேரடியாகச் சந்தித்துள்ளேன். ஆனாலும், கழக ஆய்வுக் கூட்டம் என்ற முறையில் ஒவ்வொருவரிடமும் நேரில் களிப்புடன் கலந்து உரையாடும் வாய்ப்பு என்பது கழகத் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, செயல்தலைவர் என்ற பொறுப்பில் இருக்கின்ற தொண்டர்களுக்குத் தொண்டனான – உங்களில் ஒருவனான எனக்கும் புதிய உத்வேகமூட்டும் அனுபவமாக அமைந்துள்ளது. இதனை கள ஆய்வு நிகழ்வுகளிலும் நான் குறிப்பிட்டுப் பேசியுள்ளேன்.

 

ஒவ்வொரு நாளும் 400க்கும் அதிகமான ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றியங்கள் – மாவட்டங்கள் என சந்திக்க வேண்டியிருப்பதால், அத்தனை பேருக்கும் பேசுகின்ற வாய்ப்பு அமைந்துவிடுவதில்லை என்பதற்கான காரணத்தை அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கழக அமைப்புகளின் செயல்பாடுகளை எடுத்துரைக்கின்ற வகையில், சிலரைத் தேர்வுசெய்து பேசுவதற்கு வாய்ப்பளிக்கிறோம். நிச்சயம் இது போதாது என்பதை நானும் அறிவேன். நேரம் போதாமையால் இந்தமுறை இதற்கு மேற்பட்ட எண்ணிக்கை யில் பேச அனுமதிக்க முடியவில்லையே என்ற நெருக்கடியான கவலை எனக்கும் இருக்கிறது. எனினும், உருவத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல, ஒருவரின் உள்ளத்தை மற்றொருவர் பிரதிபலித்து கழகத்தின் நிலையை எடுத்துரைக்கும் நிலையைக் காண்கிறேன். அதுதான் கழகம்! நாம் எல்லோரும் உள்ளத்தால் ஒருவரே, உருவங்களால் மட்டுமே பலராய்க் காண்கிறோம்!

 

கிண்ணம் முழுவதும் தேன் நிரம்பிய நிலையில், அதில் ஒரு துளி எடுத்துச் சுவைத்துப் பார்த்து, கலப்படமில்லாத மலைத்தேன்தானா என்பதை உறுதி செய்துகொண்டு, குழந்தையின் நலத்திற்குக் கொடுக்க வேண்டிய மருந்துடன் அந்தத் தேனைக் குழைத்துத் தருகின்ற தாயைப் போல, கழக வளர்ச்சி என்ற தேனும், அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைவதற்கான கசப்பு மருந்தும் உரிய அளவில் கலக்கப்பட்டதுபோல, கள ஆய்வில் பேசுவோர் தம் கருத்து களை மிகவும் எதார்த்தமாக முன்வைக்கிறார்கள். கருத்துரைப்போர் அனைவரின் நெஞ்சிலும் நிறைந்திருப்பது கழகத்தின் நலன் ஒன்றுதான். அதை வெளிப்படுத்தும் முறையிலேயே பேசியவர்கள் எடுத்துரைத்தனர். தனி நபர்களை விட, கழகம் எனும் தத்துவப் பாசறைதான் நம் அனைவர்க்கும் உயிர் நாடி!

 

கொட்டிக் குவித்த கருத்து மணிகளிலிருந்து ஒரு சில மணிகளை கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களுடன், உங்களில் ஒருவனாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவ்வளவையும் பகிர்ந்து கொள்ள ஆசைதான்; காலமும் நேரமும் ஏடும் கொள்ளாதே!

 

நீலகிரியைச் சேர்ந்த ஒரு நிர்வாகி தன் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, 1982ல் இளைஞரணி தொடங்கப்பட்ட சமயத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக ஊட்டிக்கு நான் வந்திருந்ததையும், அந்த நிர்வாகியின் தந்தையார் அன்று மறைந்திருந்த செய்தியை கழக நிர்வாகிகள் மூலம் கேட்டறிந்த நான் உடனடியாக அப்போதைய இளைஞரணி நிர்வாகிகள், நண்பர்கள் அன்பில் பொய்யாமொழி, பரணிகுமார் ஆகியோருடன் உடனே அவரது இல்லத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்ததையும் மறக்காமல் நினைவு கூர்ந்தார்.

 

மேலும் அவர், “தளபதி அவர்கள் எங்கள் இல்லத்துக்கு வந்த போது இரவு 1.30 மணி. நீலகிரியின் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வந்திருந்து ஆறுதல் தெரிவித்ததுடன், எனக்கு தைரியமும் கொடுத்தார். அன்று அவர் கொடுத்த தைரியத்தால்தான் தொடர்ந்து கழக பணியாற்றி, இன்று தளபதி முன்பாகவே பேசும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்””, என்று நம்பிக்கை வார்த்தைகளைத் தெரிவித்து, தொடர்ந்து கழகப் பணியாற்றுவேன் என்ற உறுதியினை வழங்கினார்.

 

ஆண் நிர்வாகிகளுக்கு இணையாக, கழகத்தின் பெண் நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். மகளிர் உரிமை பாதுகாத்தல் என்பதை வெறும் பேச்சளவில் மட்டும் சொல்லாமல், கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்குத் துணைச் செயலாளர் பொறுப்பை வழங்கி மகளிருக்கான பங்கீட்டை வழங்கி வரும் இயக்கமன்றோ!
ஈரோடு தெற்கு மாவட்டக் கழகத்தின் மகளிரணித் துணை அமைப்பாளர் காந்திமதி அவர்கள், கழகம் வளர்க்கும் பணி குறித்த தனது அனுபவங்களை மிகச்சிறப்பாக முன்வைத்தார். “தளபதி அவர்களே.. நீங்க கஷ்டப்பட்டு உழைக்கிற மாதிரி எல்லாரும் கட்சிக்காகப் பாடுபட்டால், கழகத்தின் மகத்தான வெற்றியை எவராலும் மாற்ற முடியாது. குடும்பம் என்றால் அதில் சின்னச் சின்ன பிரச்சினைகள் இருக்கும்.

 

கழகம் என்பது ஒரு கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் குடும்பம். அதிலும் சில பிரச்சினைகள் இருப்பது வழக்கம். அதையெல்லாம் பெரிதாக்காமல், தலைமையிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைப்பதுதான் எல்லோரும் செய்ய வேண்டிய வேலை. ஒவ்வொரு நாளும் என்னுடைய வேலையை முடித்து விட்டு வந்து, மாலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் கட்சி வேலைகளைச் செய்வேன். மக்களைச் சந்திப்பேன். அவர்களின் பிரச்சினை களைக் கேட்டு, முடிந்த அளவு தீர்த்து வைப்பேன். அதனால் எனக்கு ‘சேவை காந்திமதி’ என்ற பெயரே உண்டு”, என்று பெருமை பொங்கச் சொன்னார். எளிய பெண்மணியான தன்னால் கழகத்திற்கு இயன்றவரை தொண்டாற்ற முடிகிறது என்பதுதான் அந்தப் பெருமிதம்.

 

திருப்பூர் தெற்கு மாவட்டத்தைத் சேர்ந்த தொண்டரணி அமைப்பாளர் சாகுல் அமீது எதையோ சொல்லவேண்டும் என்ற ஆர்வத்துடன் பேச வந்ததால், நானும் அரங்கில் இருந்தவர்களும் எதிர்பார்ப்புடன் இருந்தோம். அவர் மிகவும் சுருக்கமாக, “உங்க உடம்பை மட்டும் பார்த்துக்குங்க தளபதி. எங்களுக்கு அது போதும். மற்றதை நாங்க பார்த்துக்குறோம்”, என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி விட்டு அமர்ந்தார். இப்படி எத்தனையோ நிர்வாகிகள், கழகம் வளர்க்கும் பொறுப்பினை தங்கள் தோளில் சுமந்திட முன்வந்ததைப் பார்த்தபோது, கடைசித் தொண்டன் உள்ளவரை இந்தக் கழகம் உயிர்ப்புடன் வாழும் – தமிழகத்தை உயர்த்தி வாழ வைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.
சேலம் மத்திய தொகுதியின் மருத்துவ அணியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் சொன்ன கருத்துகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. “என்னுடன் வேலை பார்க்கிறவர்களிடம் நீங்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்று கேட்பேன்.

 

அவர்களில் தி.மு.க. ஆதரவாளர்களும் இருப்பார்கள். வேறு இயக்கங்களை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள். தி.மு.க உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்பேன். அவர்களின் கருத்துகளைக் கேட்டுக் கொள்வேன். மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். எனக்கு உள்ள குரூப் மூலம் 70 பேருக்கு மெயில் அனுப்புவேன். அவர்களில் பலர் இப்போது நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். வளர்ந்து வரும் டெக்னாலஜிகளை பயன்படுத்தி இயக்கத்தை வளர்க்க வேண்டும்”, என்றார். கழக இளைஞர்கள் பலருடன் மூத்த நிர்வாகிகளும் இன்று சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை ஒப்பிட்டுப் பார்த்தேன். மகிழ்ச்சியும் இன்னும் அதிகமாக இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டை வளர்க்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டது.

 

இதுபோலவே, அரசியல் களத்தின் இயல்பான நிலையை எடுத்துச் சொன்னவர் நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு மகளிர் தொண்டரணித் துணை அமைப்பாளர் விசாலாட்சி. அவர் முன்னாள் கவுன்சிலர் என்பதால் கள நிலவரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். “கோஷ்டி பிரச்சினைகளை நிறைய பார்த்துட்டோம் தளபதி. ஆனா, இப்ப நீங்க கூப்பிட்டு பேசுனது பெரிய தெம்பா இருக்கு. இனி கோஷ்டிப் பிரச்சினையெல்லாம் மறந்துட்டு கட்சி வேலை பார்ப்போம். எல்லோரும் அப்படிப் பார்க்கணும். சில தொகுதியில் கூட்டணிக் கட்சிக்கு சீட்டு கொடுத்திடுவாங்களோன்னு நினைக்கிறது சகஜம்தான். ஆனா, தளபதியை சந்திச்சபிறகு தெம்பு வந்திடிச்சி. டெல்லியிலிருந்துகூட ஆளுங்க வந்து எங்க தொகுதியில நிற்கட்டும். தி.மு.க. கூட்டணின்னா ஜெயிக்க வச்சிக் காட்டுவோம்”, என்றார் உறுதியான குரலில்.

 

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சிச் செயலாளர் மகாலிங்கம், “நான் 28 ஆண்டுகளாக கட்சியிலே இருக்கேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கோஷ்டிப் பிரச்சினை இல்லாம வேலை செய்யணும். அவ்வளவுதான். எங்களுக்கு கட்சிதான் முக்கியம்”, என்று சென்னார். இப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எத்தனையோ பேர் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் ஒலித்த குரல்களால் உணர்ந்த போது, இயக்கத்தின் வலிமையும், வளமும் மேலும் மேலும் கூடுவதை அறிய முடிந்தது.

 

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் நசுருதீன் குரலிலும் இதுதான் ஒலித்தது. “நான் இளைஞரணி பதவிக்கான இன்டர்வியூவுக்கு அழைக்கப்பட்டேன். ஆனால் பொறுப்பு கிடைக்கவில்லை. அதையொரு குறையாக நினைக்காமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சி வேலையைத் தொடர்ந்து பார்த்தேன். சிறுபான்மை நலப்பிரிவில் போஸ்டிங் கிடைச்சிருக்கு. இப்பவும் முன்னே மாதிரியே கட்சி வேலையைப் பார்த்துக் கிட்டிருக்கேன். பதவியை எதிர்பார்த்து கட்சி வேலை செய்வதில்லை. கட்சி நலன்தான் முக்கியம்”, என்றார்.

 

கழகம் எனும் ஆலமரத்தினைத் தாங்கி நிற்கும் இத்தகைய விழுதுகளும், வேர்களும் நாளுக்கு நாள் பெருகிப் பரவிக் கொண்டே இருக்கின்றன. ஆர்வம் அதிகரித்து அறிவாலயம் வருகின்ற தொண்டர்கள் பலரும் எளிய மனிதர்களாக இருக்கிறார்கள். கிராமத்தினர் பலர் காலில் செருப்புகூட அணிவதில்லை; உடைகள் கசங்கியிருக்கின்றன; ஆனால், கறுப்பு – சிவப்பு கரைவேட்டி அணிவதில் உள்ள கம்பீரத்தை வெளிப்படுத்தி, தங்கள் கொள்கை வைராக்கியத்தைக் காட்டுகிறார்கள். அறிவாலயம் என்ற பெயருக்கேற்ப அதனை அனுதினமும் தொழுதிடும் கோவிலாக நினைக்கிறார்கள். சாதி – மத பேதங்களுக்கு இடமில்லாத சமத்துவக் கோவில் அது. அப்படித்தான் தலைவர் கலைஞர் அதனை உருவாக்கிக் கட்டமைத்திருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் மதிய உணவை ஊராட்சிச் செயலாளர்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது, அவர்களுக்கு ஏற்படும் பெருமையைவிட எனக்கு அதிக மன நிறைவு. கட்சி நிலவரங்களைக் கடந்து, அவர்களின் குடும்ப விவரம், தனிப்பட்ட நலன் ஆகியவை குறித்துப் பேசும்போது, அவர்கள் வெளிப்படுத்தும் அன்பு, மதிய விருந்தை விடவும் சுவையாக இருக்கிறது.

 

களஆய்வில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் என்னுடன் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவர்களின் மன உணர்வை அறிந்து, நேரம் கூடுதலானாலும் பரவாயில்லை என ஒவ்வொருவருடனும் படம் எடுத்துக்கொள்ளும்போது, தோழமையுடன் தோளில் கைபோட்டுக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு வேறெதுவும் ஈடில்லைதான். படம் எடுக்க விரும்புகிறவர்கள் கழகத்தின் தொண்டர்கள் என்றால் நான் தொண்டர்களின் தொண்டனாக நினைத்து அவர்களின் அன்பை அப்படியே அரவணைத்து ஏற்றுக் கொள்கிறேன். தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே அன்றோ!

 

கழகத்தை குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது குடும்பக் கட்சிதான்; பல இலட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் என்று நெஞ்சம் நிமிர்த்திட் சொல்வதற்குக் காரணம், குடும்பப் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக நம் உடன்பிறப்புகள் இருப்பதால்தான். “நம் அனைவரையும் ஒரே தாய் பெற முடியாது என்பதால் தான், தனித்தனித் தாய்க்குப் பிள்ளைகளாகப் பிறந்திருக்கிறோம்”, என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதை மறக்க முடியுமா?

 

பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா! தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது.

 

அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன். நேரில் பங்கேற்க இயலாத உடன்பிறப்பு களின் மனக் குரலையும் உணர்கிறேன். இயக்கம் வெற்றிநடை போடுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை வழங்குகிறேன்!
“விதையாகும் வேர்”, என்ற தலைப்பில் தலைவர் கலைஞர் அவர்கள்,
“ஒரே மரம் தான்
அதன் தண்டு, தரையில் காலூன்றி
ஆகாயம் நோக்கி மேலேறும்;
வேர்களோ இறங்கும் பூமிக்குள்!
பயங்கரப் புயல்மழை ஊழியில் ஆடிடும் மரமோ
படுத்துவிட்ட கிளை முறிந்து தண்டொடிந்து தரை விழும்.
விழாமல் இருப்பது வேர் மட்டும் தான்; எனும்
தாழாத உண்மையுணர்ந்து தன்மானம் போற்றிடுவோம்!
கொற்றமே தாழ்ந்து குடையைக் கவிழ்த்தாலும்
கொள்கையே உயிர் என்போன், வேருக்குச் சமம்;
அந்த வேர் இருந்தால் தான் அதில் தளிர் துளிர்க்கும்”
என்று எழுதிய கவிதை வரிகள், கழக தோழர்க்கும் – தொண்டர்க்கும் பொருத்தம் தானன்றோ!

அன்புடன்,
மு.க.ஸ்டாலின்.