திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ராஜகண்ணப்பன் சந்தித்து ஆதரவு..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் ராஜ கண்ணப்பன்.

மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிரடியாக விலகி, தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

எம்ஜிஆர் காலத்திலிருந்தே ராஜ கண்ணப்பன் மிகவும் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தவர். அவர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அங்கிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் திமுகவில் இணைந்து இளையான்குடி எம்எல்ஏவானார். அதன்பின் அங்கிருந்தும் விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டவர் ராஜ.கண்ணப்பன். ஆனால் 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து 2011-ல் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனிடம் தோல்வியடைந்தார்.

தற்போது ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ள ராஜ கண்ணப்பன், சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முயற்சித்து வந்தார்.

ஆனால் இந்த 2 தொகுதிகளை அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியது. இதனையடுத்து ராஜ கண்ணப்பன் யாதவ் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்,

யாதவ் சமூகத்தினர் மதுரையில் நிறைந்து இருப்பதால் இந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார்.

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.கோபாலகிருஷ்ணன் வென்றார்.

அந்த நம்பிக்கையிலும், திமுகவை அழகிரி எதிர்ப்பதாலும் எப்படியும் மதுரையில் நின்றால் வெற்றி நிச்சயம் எனக் கருதி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் மதுரை தொகுதியை குறி வைத்திருந்தார்.

அப்படி இருந்த போதிலும் இவருக்கு சீட் ஒதுக்க அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்று 20 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் ராஜ கண்ணப்பன் பெயர் இடம் பெறவில்லை.

அதற்கு பதிலாக ராஜன் செல்லப்பா மகன் ராஜன் சத்தியனுக்கும் மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் கண்ணப்பன் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மக்களவை தொகுதிக்கு தனது ஆதரவை தெரிவித்தார் ராஜ கண்ணப்பன்.

இதனால் கண்ணப்பனின் இந்த அறிவிப்பு ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜ கண்ணப்பன், அதிமுகவை பற்றியும் ஓபிஎஸ் பற்றியும் பல்வேறு குற்றசாட்டை முன்வைத்து உள்ளார். ராஜ கண்ணப்பனின் இந்த அதிரடி தாவல் தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது