சொன்னாங்க… செஞ்சுட்டாங்க… : சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முன்னர் திமுக எச்சரித்தபடி சபாநாயகர் தனபால் மீது எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் நகலை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்மொழிந்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அளித்த தீர்மானத்தை இன்று சட்டப்பேரவை செயலாளரிடம் கொடுத்துள்ளோம். அதனுடைய ஒரு நகல் முறைப்படி சபாநாயகருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

2017 செப்டம்பரில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற போது ஒரே மாதத்தில்  பதவி நீக்கம் செய்தார்கள். அப்போதே பல விமர்சனங்கள் எழுந்தன.

அதே நேரத்தில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை இல்லை மாறாக அவர்களுக்கு பரிசு கொடுப்பது போல துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில்  உள்ளது.

இந்த நேரத்தில் இப்படிப்பட்ட தவறான முடிவுகளை எடுத்தது குறித்து பல்வேறு இடங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சபாநாயகர் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் வழங்கி இருப்பதாக ஊடகங்களில் கேள்விப்பட்டவுடன் எதிர் கட்சி தலைவர் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் ஜனநாயக படுகொலை ஏற்றுக்கொள்ள முடியாது,  ஒருதலைப்பட்சமாக சபாநாயகர் செயல்படுவதைப் பார்த்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது இப்படி நடவடிக்கை எடுத்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டுவரும் என்றார். அதன் அடிப்படையில் உடனடியாக தலைவர் அவர்கள் அளித்த தீர்மானத்தை சபாநாயகர் செயலாளரிடம் கொடுத்திருக்கிறோம்.

சட்ட விதிகளுக்குட்பட்டு சபாநாயகரோடு கலந்து ஆலோசித்து செயலாளர் முடிவெடுப்பார் அந்த முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

அப்போது திமுக தலைமை நிலைய செயலாளர் கு.க செல்வம், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.