முக்கிய செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார்.

50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தெலுங்குதேசம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதால் அந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக அறிவித்த சபாநாயகர், இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை (நாளை) விவாதம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவை அளிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், இந்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க.வும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நாளை முழுவதும் விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் ஓட்டெடுப்பு நடைபெறும். எனவே, நாளை சபையில் கேள்வி நேரம் உள்ளிட்ட பிற எந்த அலுவலும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தாலும்கூட, அது ஓட்டெடுப்பில் வெற்றி பெறாது என்பதை சபையில் தற்போது உள்ள கட்சிகளின் பலம் தெளிவாக காட்டுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளோ வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளன. இதற்காக பிற கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகின்றன.