“கழகமெனும் ஆயிரம் காலத்துப் பயிர் மேலும் செழித்து வளரவே கள ஆய்வு!”- திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் அழைப்பு மடல்.
அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ. அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன்பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. சுயமரியாதையையும், சமூகநீதியையும் இரு சிறகுகளாகக் கொண்ட திராவிட இயக்கம் என்பது, நூறாண்டு கடந்தும் ஓய்வின்றிச் சிறடிகத்துக் கொண்டே உயரே உயரே பறந்துகொண்டுதான் இருக்கிறது. தாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்கு இரைதேடி வெகுதூரம் பறந்து சென்று, இரையுடன் திரும்பி வந்து வாஞ்சையுடன் ஊட்டுவது போல, தமிழக மக்களுக்கு உண(ர்)வூட்டும் இயக்கமாக, திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.
ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழக மக்களின் நலனுக்காகவும், இன – மொழி பாதுகாப்புக்காகவும் உறுதியுடன் பாடுபடும் இயக்கமான தி.மு.கழகத்தின் ஆற்றல் அளவிடற்கரியது. பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் நிறைவேற்றிய திட்டங்கள், கொண்டுவந்த சட்டங்கள் ஆகியவை, இரைதேடிப் பறந்து சென்று திரும்பி வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிய தாய்ப் பறவையின் தகைமைக்கு ஈடானவை. தமிழகத்தை இந்திய துணைக்கண்டத்தின் முன்னோடி மாநிலமாக மாற்றிக்காட்டிய பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் வழியில், கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு கிஞ்சிற்றும் தவறாமல், கழகத்தை அதே வலிவோடும் பொலிவோடும் வீறுநடை போட்டு வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பினை நாம் அனைவரும் சமமாகப் பங்கிட்டுக்கொண்டு, அதை நிறைவேற்றிட உடல் – பொருள் – ஆவி அனைத்தையும் பரிமாறிடச் சித்தமாயிருக்கிறோம்.
தமிழகத்தில் தரங்கெட்டதோர் ஆட்சி, மாநிலத்தின் நலன்களைச் சிதைத்து, சீரழித்து வருகிறது. அந்தக் கேடுகெட்ட ஆட்சியை ஏன் கீழே இறக்காமல் இருக்கிறீர்கள் என்று தி.மு.கழகத்தைப் பார்த்துப் பொதுமக்கள் நாள்தோறும் கேள்விக்கணை தொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். தமிழகத்தை மாற்றக்கூடிய வலிமையும், தகுதியும் தி.மு.கழகத்திற்கு மட்டுமே உண்டு என்கிற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைதான் இந்தக் கேள்விக்குக் காரணம். ஊடகங்களின் கருத்துகளும், கணிப்புகளும் கழகத்தை மையப்படுத்தியே வெளியிடப்படுகின்றன. “எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே” என்பதைப்போல, எல்லாருடைய கண்ணும் – கருத்தும் நம்மை நோக்கியே இருக்கின்றன.
நமக்கான பாதை நீண்டதாயினும், மிகவும் தெளிவானது. ஜனநாயக நெறி அடர்ந்தது. அதில் கற்களும் முட்களும் தடை ஏற்படுத்தும்போது, அவற்றை அகற்றியெறிய வேண்டிய மராமத்துப் பணியை நாம் மேற்கொண்டாக வேண்டும். பாதை பண்படுத்தப் பட்டதாக இருக்கும் போதுதான் பயணத்தின் இலக்கினை விரைந்து எட்டமுடியும். கழகத்தின் ஜனநாயகப் பாதையில் ஏற்படும் சிறுசிறு தடைகளை அகற்றி, வழக்கம்போல விரைந்து பயணித்து, வெற்றி இலக்கினை அடைவதற்கு ஏதுவாக, தடைக்கற்களின் அளவும் இயல்பும் என்ன, அணிவகுத்து விரைந்து செல்ல ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு கட்டத்திலும் எந்தமாதிரியான உத்திகளைக் கையாள வேண்டும் என்பன போன்றவற்றைக் கலந்தாலோசித்து வடிவமைத்துக் கொள்வதற்காகவே, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் களஆய்வு திட்டமிடப்பட்டு, தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓர் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் வரையறுத்துச் சொன்னதை நாம் அனைவரும் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. “அமைப்பு என்பது பலருடைய எண்ணங்களைத் திரட்டி, பலருடைய சக்திகளை ஒருங்கு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொது இடம் – ஒரு பாசறை. பாசறையிலே பலவிதமான போர்க்கருவிகளும், வீரர்களும் தேவை. கருவிகளின் எண்ணிக்கையும் வகையும் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
பாசறையின் உபயோகம் அதிகப்பட வேண்டுமானால், வாளை மட்டும் குவித்து வைத்துக்கொண்டு, கேடயம் தேடாமல் இருப்பதோ, விற்களைக் குன்றெனக் குவித்துக் கொண்டு அம்புகள் இல்லாமல் இருப்பதோ, துப்பாக்கிகளைக் கிடங்குகளில் குவித்து வைத்துக் கொண்டு வெடிமருந்து தேடாமல் இருந்து விடுவதோ, இவையாவும் ஒழுங்காகவும் தேவைக்கேற்ற அளவும் இருந்து, இவைகளைத் திறம்பட உபயோகிக்கும் ஆற்றலுள்ள வீரர்கள் இல்லாதிருப்பதோ, வீரர்கள் இருந்தும் இவர்களை நடத்திச்செல்லும் படைத்தலைவன் இல்லாதிருந்தால், பாசறை இருந்து என்ன பயன்? அழகிய சிலைபோல இருக்குமே தவிர பயன்தரும் மனிதராக இருக்கமுடியாது”, என்ற அமைப்புக்கான இலக்கணத்தை மறந்துவிடமுடியாது.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அடிக்கடி நேரில் வந்து கழக நிர்வாகிகளையும், தோழர்களையும் சந்திக்கக்கூடிய அரிய வாய்ப்பை உங்களில் ஒருவனான நான், கழகத்தின் செயல்தலைவர் என்ற முறையில் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இந்தமுறை கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உங்களை அழைத்து உரையாடவும், அதன்வழியே கழகத்தை மென்மேலும் வலிமைப்படுத்திக் கூர்மைப்படுத்தும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன்.
வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தக் களஆய்வு தொடங்குகிறது. மாவட்டவாரியாக ஒவ்வொரு நாளும் நடைபெறவுள்ள களஆய்வில், கழகத்தின் ஆணிவேருக்கு முறையாக நீர்பாய்ச்சி, உரமூட்டவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறேன். திராவிட இயக்கம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அதனைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டிய கடமை தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அட்டவணையின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்தைச் சார்ந்த ஊராட்சிச் செயலாளர்கள், பேரூர்க் கழகச் செயலாளர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள கழக துணை அமைப்புகளுடைய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என்ற வரிசையில் சந்திப்பு நடைபெற்ற பிறகு, ஒன்றிய – நகர – பகுதி கழக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெறவிருக்கிறது.
கழகத்தின் நலன் பெருக்கும் இந்தக் களஆய்வின் போது, நீங்கள் பொறுப்பு வகிக்கும் பகுதியில், அதிலும் உங்கள் மாவட்டத்தில் உள்ள கழகத்தின் நிலையைப் பற்றித் தெரிவிக்க விரும்பும் புகார்கள் / கருத்துகள் / ஆலோசனைகளை எல்லாம் சிறுகடிதமாக எழுதி, களஆய்வு நடக்கும் இடத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம். அந்தக் கடிதங்களை ஆய்வு செய்ய, என்னுடைய தேரடிக் கட்டுப்பாட்டில் குழு அமைக்கப்படும். பொதுத்தேர்தலின்போது வாக்குப்பெட்டியில் சேரும் வாக்குகள் எப்படி தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றனவோ அதுபோல, அந்தப் பெட்டியில் போடப்படும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், கழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்ற உறுதியினை அளிக்கிறேன்.
எழுத்து மூலமாக மட்டுமின்றி, பேச்சு மூலமாகவும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு இந்தக் களஆய்வு சந்திப்பில் வாய்ப்பளிக்கப்படும். நிறைகள் – குறைகள் – நெஞ்சில் நிறைந்திருக்கும் உணர்வுகள் இவற்றையெல்லாம் நேரடியாக எடுத்துச் சொல்வதற்கும், பல நெருப்பாறுகளை நீந்தித் தலைவர் கலைஞர் அவர்கள் பாதுகாத்து வைத்திருக்கும் எஃகுக் கோட்டையான கழகத்தை அதே வலிமையுடன், அவரது அன்பு உடன்பிறப்புகளான நாம் எல்லோரும் தொடர்ந்துப் பாதுகாத்திட வேண்டும்.
எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டிய கழகப் பணிகள் குறித்தும், அதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவதற்கும் இந்தக் களஆய்வு துணை நிற்க வேண்டும்.
பகையுணர்ச்சி களைந்து, ஆரோக்கியமான போட்டியுணர்ச்சி மிகுந்து, வாளும், கேடயமும் தாங்கும் தகுதிமிக்க படைவீரர்களாக நடைபோடுவதற்கான பார்வையையும், பலத்தையும் பெறுவதற்கான நல்வாய்ப்பாக இந்த சந்திப்பு அமையவேண்டும் என எதிர்பார்த்து, உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன். மக்கள் விரோத மத்திய – மாநில அரசுகளிடமிருந்து தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய போராட்டக் களங்கள் நிரம்ப உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து வரிசையாக வரவிருக்கின்றன.
போராட்டக் களங்களிலும், தேர்தல் களங்களிலும் வெற்றி பெறுவதற்கான கால்கோள் நிகழ்வாக கழகத்தின் களஆய்வு அமையட்டும். காத்திருக்கிறேன் உங்கள் அனைவரையும் காண… உங்களில் ஒருவனாக!
அன்புடன்,
மு.க.ஸ்டாலின்.