தமிழகத்தில் திமுக கூட்டணி 34 க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வடமாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சம அளவிலான இடங்கள் கிடைக்கும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.
நாட்டின் 17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 12-ம் தேதியுடன் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம், பீகாரில் 8, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளுக்கு, 7-வது மற்றும் இறுதி கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த 4 தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சூலூர் தொகுதியில் 22 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 15 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 63 பேர் என மொத்தம் 137 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அடுத்து எந்த கட்சி ஆட்சியமைக்கும்? மீண்டும் யார் பிரதமராக பொறுப்பேற்பார் என பல்வேறு செய்தி நிறுவனங்கள் தங்கள் கருத்துக் கணிப்பினை வெளியிட்டு வருகின்றன.
இந்தியா டுடே கருத்துக்கணிப்பு:
தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அதிமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், மத்தியில் ஆட்சியமைப்பதில் திமுக முக்கிய சக்தியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டைம்ஸ்நவ்- வி.எம்.ஆர். செய்தி கருத்துக்கணிப்பு:
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 306 இடங்கள் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ்நவ்- வி.எம்.ஆர். செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் திமுக கூட்டணி 34 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வர்ணா செய்தி கருத்துக்கணிப்பு:
நாடாளுமன்ற தேர்தலில் 295-ல் இருந்து 315 இடங்கள் வரை பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக ஸ்வர்ணா செய்தி நிறுவனம் கணித்துள்ளது. இதன்படி, காங்கிரஸ் கூட்டணி 122-ல் இருந்து 125 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் இதரக் கட்சிகள் 102 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக ஸ்வர்ணா கருத்துக்கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது.
நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு:
நாடாளுமன்றத் தேர்தலில் 286 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றிபெறும் என்று நியூஸ் நேஷன் செய்தி நிறுவனம் கணித்துள்ளது. மேலும், காங்கிரஸ் கூட்டணி 122 தொகுதிகளையும், இதர கட்சிகள் 134 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
பாஜக தனித்து அதிகமான இடங்களைப் பிடிக்க வாய்ப்பிருந்தாலும், காங்கிரஸ் – பிற மாநிலக்கட்சிகளும் அதற்கு நிகரான இடங்களைப் பெற வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. எனவே, மத்தியில் மீண்டும் பாஜக அத்தனை எளிதில் ஆட்சியை அமைத்துவிட முடியாது என்பதே கருத்துக் கணிப்புகள் கூறும் செய்தியாக தெரிகிறது.