திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்..

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதயநிதியை திமுக இளைஞரணிச் செயலாளராக நியமித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

இது குறித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக நியமித்து இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டவிதி பிரிவுகள் 18 மற்றும் 19ன் படி இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளராக இதுவரை பணியாற்றி வந்த மு.பெ.சாமிநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இளைஞரணிக்கு தலைமைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன் உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடு எங்கும் உதயநிதி பரப்புரை செய்து இருக்கிறார்.

இதனிடையே தி.மு.க இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து வெள்ளகோவில் சாமிநாதன் விடுவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளகோவில் சாமிநாதன் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே நாட்டிலேயே இளைஞர் அணியை முதன்முதலில் கொண்டு வந்தது திமுக தான் என்று பேரவையில் கூறிய திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ்,

திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள என் ஆருயிர் நண்பன் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து  திமுக இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி ஸ்டாலின் வழிநடத்தி செல்வார் என்றும் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது பற்றி வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.