முக்கிய செய்திகள்

மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..

ஆன்லைன் வவுச்சர்கள், வெளிநாட்டு பயணங்கள், தேவைப்பட்டால் பெண்களுடன் உல்லாசம் என மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் பற்றி பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், பெட்ரோ கார்டுகள், ஆன்லைன் ஷாப்பிங்குக்குத் தேவையான இ-வவுச்சர்கள் வழங்குதல் மற்றும் பெண்களை “பொழுதுபோக்கு” ​​க்காகக் கிடைக்கச் செய்வது

போன்ற புதுமையான திட்டங்கள் மூலம் மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பரிந்துரைக்கச் சொல்லி மருத்துவர்களைத் தூண்டுகின்றன.

போகிற போக்கில் சாட்டப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்றல்ல இது. மருந்து நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களுக்கிடையேயான இந்த நூதனத் தொடர்பானது

சுமார் 75 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் 40 மருத்துவ பிரதிநிதிகளிடம் 6 நகரங்களில் சமூக ஆர்வலர்களான இரண்டு மருத்துவர்கள் மூலமாக நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்த உண்மைகள் இவை.

அவர்கள் நடத்திய உண்மை அறியும் ஆய்வில் மேலும், தெரிய வந்தவை, 20% க்கும் குறைவான மருத்துவர்களே இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதும் ஒன்று.

அதாவது மருத்துவர்கள் மருந்துக் கம்பெனிகளிடமிருந்து லஞ்சம் பெறும் நிலை வந்தால் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மருந்து நிறுவனங்களுக்கு மேலதிகமான வியாபாரத்தைக் கொண்டு வருவதாக ஒப்புக் கொண்டு லஞ்சம் பெற்ற மருத்துவர்கள்

ஒருவேளை தங்களது விற்பனை இலக்கை அடைய முடியாமல் போகும் போது அவர்கள் சம்மந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் மூலமாக மிரட்டலுக்கு உள்ளாகி துன்புறுத்தப்படும் நிலையும் கூட உண்டு என்கிறார்கள்.

புனேவைச் சேர்ந்த சுகாதாரக் குழுவான சதியுடன் இணைந்திருக்கும் டாக்டர் அருண் காத்ரே மற்றும் டாக்டர் அர்ச்சனா கிவேட் ஆகியோரால் 72 பக்கங்கள் கொண்ட “Promotional Practices of the Pharmaceutical Industries and the Implementation Status of Related Regulatory Codes in India” (மருந்துத் தொழில்களின் ஊக்குவிப்பு நடைமுறைகள்

மற்றும் இந்தியாவில் அது தொடர்பான ஒழுங்குமுறை குறியீடுகளின் அமலாக்க நிலை”) எனும் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது இந்திய அரசு, குற்றச்சாட்டுக்கு உள்ளான மருந்து நிறுவனங்களின் மீது காட்டும் மெத்தனப் போக்கையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களை வகை பிரித்துக் கொண்டு தங்களது மருந்துகளுக்கான விற்பதற்கான மார்க்கெட்டிங் ஸ்ட்ரேட்டஜியை முதலில் வகுத்துக் கொள்கின்றன.

அந்த ஸ்ட்ரேட்டஜியின் படி முதல் நிலை மருத்துவர்கள், இரண்டாம் நிலை மருத்துவர்கள் என மருத்துவர்கள் வகை பிரிக்கப்பட்டு அவர்களிடம் மருந்து நிறுவனங்களின் மாதாந்திர, வருடாந்திர விற்பனை இலக்கை முன்னிட்டு பேரம் பேசப்படுகிறது.

மருந்துகளின் விற்பனையை ஊக்குவிக்க வெவ்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. மருத்துவர்களுக்கான வகைப்பிரிவில் கூடுதலாக மருத்துவ நிபுணர்கள், தங்கள் பணிக்காலத்தில் நற்பெயரைச் சம்பாதித்த மருத்துவர்கள், ஒபீனியன் லீடர்கள் எனப்பலர் உள்ளனர்.

இவர்களின் முக்கியமான வேலை மருந்து நிறுவனங்களின் வணிகத்தை உயர்த்தித் தருதலே!

மருத்துவர்களுக்கான பிரஸ்கிரிப்ஷன் பேட்டர்னை முடிவு செய்யும் தகுதி கொண்ட அதிகாரம் படைத்த மருத்துவர்கள் மேற்படி மருந்து நிறுவனங்களால் நன்கு கவனிக்கப்படுகிறார்கள்.

இவர்களது ஆதிக்கம் அலோபதி மருத்துவத்துறையில் மட்டுமே என்று சொல்லி விடமுடியாது. AYUSH (ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி, சித்தா, ஹோமியோபதி) மருத்துவத்துறைகளிலும் இத்தகைய மருந்து நிறுவனங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மேற்கண்ட அறிக்கை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

மருத்துவர்கள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கிடையிலான இந்த மாபெரும் வர்த்தகத்தில் ஏமாந்த சோனகிரிகள் யார் என்றால் இவர்களது ஏமாற்றுத்தனத்தைப் பற்றிக் கொஞ்சமும் அறிய வாய்ப்பற்ற அப்பாவி பயனாளர்களான நோயாளிகளே!

நன்றி

தினமணி.காம்