காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்: ஆகப் போவது என்ன?

ஒரு வழியாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் முதலம் கூட்டம் திங்கள் கிழமை  (ஜூலை 2) நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் தரப்பில் எடுத்துரைத்து வலியுறுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சேர வேண்டிய 177.5 தண்ணீரையேனும் தரப்படுவதை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 

காவிரிப் பிரச்சினை தொடர்பாக பெங்களூருவில் நேற்று முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி மாவட்டங்களின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்துக் கொண்டனர். மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்ததற்கு, அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரிவித்தன.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு அறிவித்த காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு திட்டத்தை ஏற்க முடியாது என முதலமைச்சர் குமாரசாமி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பவும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாளை நடைபெற உள்ள காவிரி ஆணையத்தில் கர்நாடகப் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டது.

கர்நாடகம் தன் நிலையில் இருந்து சற்றும் இறங்கி வர மறுக்கும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்தக் கூட்டத்தால் பயன் உண்டா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் செய்தால் காவரி மேலாண்மை ஆணையம் அதற்கு எதிராக என்ன செய்ய முடியும், அதற்கான அதிகார பலம் இருக்கிறதா என்பது குறித்தெல்லம் தற்போது தெளிவான கருத்துகள் இல்லை. என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும், இந்த ஆண்டும் காவிரி டெல்டா காய்ந்து கருகுவது மட்டும்  உறுதி என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை. ஆணைய நாடகத்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதுதான் பலரது கருத்தாகவும் இருக்கிறது.

Does Cauvery management authority Solve the long long years dispute