திருப்பூரில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
“அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் அமைத்த ஊரான திருப்பூரில் இன்று ‘தமிழகம் மீட்போம்’ என்ற முழக்கத்தை உரக்கச் சொல்வதற்காக நாம் கூடியிருக்கிறோம்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்கின்ற மாவட்டமாகத் திருப்பூர் மாவட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த பத்தாண்டுக் காலமாக, அதிலும் குறிப்பாகக் கடந்த ஐந்தாண்டு காலமாகப் பெரிய நிறுவனங்களாக இருந்தாலும், சிறுகுறு நிறுவனங்களாக இருந்தாலும் அவை செயல்பட முடியாமல் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி வருகின்றன. அதற்கு மத்திய பாஜக அரசும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசும் தான் முழுமுதல் காரணம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
தொழில் வளர்ச்சியில், பின்னலாடை உற்பத்தியில், பருத்தி நூல் உற்பத்தியில், துணிகள் ஏற்றுமதியில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் தலைசிறந்து விளங்கிய திருப்பூர் மாவட்டமானது பின் தங்கியதற்கு இவர்கள்தானே காரணம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லிக் கொள்கிறார்.
அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகியோர் இந்த மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் சேர்ந்து இந்த பத்தாண்டுக் காலத்தில் எத்தனையோ திட்டங்களை இந்த மண்டலத்துக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதனைச் செய்தார்களா? கேட்டால் அத்திக்கடவு – அவிநாசித் திட்டத்தைச் சொல்வார்கள்.
அத்திக்கடவு குடிநீர் விநியோகத்தையே முடக்கிவிட்டார்கள். 2012ஆம் ஆண்டு மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்தது. ஆனாலும் அதிமுக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. நிலத்தைக் கையகப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை.
2015ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் போடப்பட்டது. நீதிபதிகள் அதிமுக ஆட்சிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். திமுக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியது. சட்டப்பேரவையில் நான் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றேன். இவ்வளவும் நடந்தபிறகு வேறு வழியில்லாமல் இந்த ஆட்சி அறிவித்தது.
எனவே, அத்திக்கடவுக் கனவை, தான் நிறைவேற்றியதாக எடப்பாடி பழனிசாமி, இந்த வட்டாரத்தை ஏய்த்துக் கொண்டு இருக்கிறாரே தவிர அது உண்மையல்ல.
இந்த மண்டலத்தைச் சேர்ந்த வேலுமணியும் தங்கமணியும் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாகச் சம்பாதிப்பதில் போட்டி போடுகிறார்களே தவிர, மக்கள் பணிகளைச் செய்யவில்லை
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஊழலாட்சித் துறை அமைச்சர் என்றுதான் சொல்ல வேண்டும். பினாமி கம்பெனிகளைத் தொடங்கி உள்ளாட்சித் துறை டெண்டர்கள் அனைத்தையும் சூறையாடி வருகிறார். ஸ்மார்ட் சிட்டி ஊழல், எல்.ஈ.டி. பல்பு ஊழல், குப்பை அள்ளும் வண்டி கொள்முதலில் ஊழல், சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரிய டெண்டரில் ஊழல், வேலை நியமன ஊழல், எம் சாண்ட் பயன்படுத்துவதில் ஊழல் என்று வண்டி வண்டியாக ஊழல் செய்தவர்தான் அமைச்சர் வேலுமணி.
பணம் சம்பாதிப்பதற்காக, பில் போட்டு பணத்தை எடுப்பதற்காக சில திட்டங்களைச் செயல்படுத்துவதாக நாடகம் ஆடுகிறார்களே தவிர மக்களுக்குச் செய்யவேண்டும் என்பதற்காக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் எந்தப் பணியையும் செய்யவில்லை.
உள்ளாட்சித் துறையில் 349 டெண்டர்கள் மூலமாக நடைபெற்ற ஊழல்கள் குறித்து திமுகவும் அறப்போர் இயக்கமும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுத்தது. அவர்கள் அதனை விசாரிக்கவே இல்லை. உயர் நீதிமன்றத்துக்கு இதனைக் கொண்டு போனோம்.
உயர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் மனு அனுப்பவில்லை அமைச்சர் வேலுமணி. பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கலாமா என்று நீதிமன்றம் எச்சரித்தது. லஞ்ச ஒழிப்புத் துறையையும் நீதிமன்றம் கண்டித்தது. இப்படி நீதிமன்றத்தை மதிக்காத, நீதிமன்றத்தால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட அமைச்சர்தான் அமைச்சர் வேலுமணி.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் நேரடியாகக் கொள்ளையடிக்க முடியாது என்பதற்காக அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் வைத்திருந்தார். நீதிமன்றம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டது. பலமுறை உத்தரவுகளைப் போட்டுக் கண்டித்தது. வேறு வழியில்லாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார். அதுவும் முழுமையாக நடத்தவில்லை. அரைகுறையாக நடத்தினார்கள். கிராமப் பகுதிகளுக்கு நடத்தினார்களே தவிர, நகராட்சிக்கு நடத்தவில்லை. ஏன் நடத்தவில்லை? நகராட்சியில்தான் அதிகமாகக் கொள்ளையடிக்க முடியும் என்பதால் நடத்தவில்லை.
கிராமப் பகுதியில் பெரும்பாலும் திமுகவினர் வெற்றிபெற்று வந்துவிட்டார்கள். அதுவும் அவர்களுக்குப் பெரிய பின்னடைவு ஆகிவிட்டது. இப்படி நகர்ப் பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தை வைத்துப் பல ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டார் அமைச்சர் வேலுமணி. இவர் மீதான ஊழல் புகார்களை மட்டும் தனியாக விசாரிக்கத் தனி நீதிமன்றமே அமைக்க வேண்டும். அந்த அளவுக்கு மலையளவு குற்றச்சாட்டுகள் வேலுமணி மீது குவிந்துள்ளன.
உள்ளாட்சித் துறை அமைச்சராக மட்டுமல்லாமல் தன்னை சூப்பர் முதல்வரைப் போல நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருபவர் அமைச்சர் வேலுமணி. கொள்ளை, லஞ்சம், முறைகேடுகள் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் தன்னை அரசியல் ரீதியாக விமர்சிப்பவர்களைப் பழிவாங்குவதிலும் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல்கள் செய்வதிலும் கைதேர்ந்தவராக இருப்பவர் அமைச்சர் வேலுமணி.
தன்னை எதிர்த்து எழுதிய காரணத்தால் பத்திரிகையாளர்களைக் கைது செய்து கோவையில் சிறையில் அடைத்தார் அமைச்சர் வேலுமணி. கரோனா காலத்திலும் தனது கொள்ளைகளை நிறுத்தாமல் தொடரும் வேலுமணியின் வேலைகளைத் திமுகவின் கோவை மாவட்டச் செயல்வீரர்கள் தொடர்ந்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்கள். இதற்கு முறையாகப் பதில் சொல்ல முடியாத வேலுமணி, தனது கையில் அதிகாரம் இருப்பதால் திமுகவினரைக் கைது செய்து சிறைச்சாலைகளைத் தனது சதிவலைக்குப் பயன்படுத்தி வருகிறார்.
இதேபோல் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மீது காற்றாலை மின்சார ஊழல், தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் ஊழல், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஊழல், மின் வாரியத்துக்கு உதிரிபாகங்கள் வாங்குவதில் ஊழல் என்று பல்வேறு புகார்கள் குவிந்துள்ளன. இதை எல்லாம் மறைப்பதற்காக தமிழகம் மின்மிகை மாநிலமாக ஆகிவிட்டது என்று கதைவிட்டுக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் தங்கமணி.
ஒரு மாநிலம் தனது தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதோடு, தனியாருக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மின்சாரத்தை விற்பனை செய்தாலோதான் அந்த மாநிலத்துக்கு மின்மிகை மாநிலம் என்று அர்த்தம். அப்போதுதான் மின்மிகை மாநிலம் என்று சொல்ல முடியும்.
ஆனால், தனியாரிடம் இருந்து 3580 மெகாவாட் மின்சாரத்தைக் கடன் வாங்குகிறது தமிழக அரசு. எதற்காக வாங்குகிறார்கள். அரசு மூலமாகத் தயாரிக்கும் முயற்சிகளை எதனால் எடுக்கவில்லை? தனியாரிடம் வாங்கினால்தான் கமிஷன் கிடைக்கும். அதற்காகத்தான் வாங்குகிறார்கள்.
மூத்த அமைச்சரான செங்கோட்டையனுக்குப் பள்ளிக் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அவர் அமைச்சர்தானா? அல்லது அமைச்சர் மாதிரியா என்பது தெரியவில்லை. முதல்வருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பள்ளிகள் திறக்கப்படாது என்று அமைச்சர் அறிவிப்பார்.
அடுத்த நாளே திறக்கப்படும் என்று முதல்வர் சொல்வார். பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தாகாது என்பார் அமைச்சர். அடுத்த நாளே ரத்து செய்வார் முதல்வர். பள்ளிக் கல்வித்துறையில் அதிகாரிகள் அறிவிப்பதும் அமைச்சருக்குத் தெரியவில்லை. அமைச்சர் என்ன சொல்கிறாரோ அதற்கு மாறாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ஐயோ பாவம், செங்கோட்டையனிடம் கை கட்டி நின்றவர் பழனிசாமி என்பதற்காக இப்படியா பழிவாங்குவது? இந்த மண்டலத்தில் இன்னொரு அமைச்சர் இருக்கிறார். அவர்தான் உடுமலை ராதாகிருஷ்ணன். அவர் என்ன நிலைமையில் இருந்தவர், இப்போது என்ன நிலைமையில் இருக்கிறார் என்பது அவரது கட்சிக்காரர்களுக்கே தெரியும்.
இன்னொரு அமைச்சர் கருப்பண்ணன். திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள் வருவதைப் பற்றிக் கேள்வி கேட்டால், ‘கோவை மக்கள் சோப்பு போட்டுக் குளிப்பதால் நொய்யல் ஆற்றில் நுரையாக இருக்கிறது’ என்று கண்டுபிடித்த விஞ்ஞானி அவர். மதுரையில் ஒரு தெர்மகோல் விஞ்ஞானி இருக்கிறார் என்றால், இந்த மண்டலத்தில் ஒரு சோப்பு விஞ்ஞானி இருக்கிறார் அவர்தான் கருப்பண்ணன்.
இப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, இந்த மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகிய யாராலும் இந்த மண்டலத்துக்கு என்ன பயன் என்று பார்த்தால், எதுவும் இல்லை.
தங்கள் பதவியைப் பயன்படுத்தி தங்கள் குடும்பத்துக்கு, உறவினர்களுக்கு, பினாமிகளுக்கு சொத்துச் சேர்த்துக் கொடுத்தார்கள் என்பதைத் தவிர எந்த நன்மையையும் இந்த மண்டலத்துக்கு செய்யவில்லை.
உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரையிலான சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக ஆக்கியது திமுக சார்பில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஜி.வெங்கட்ராமன். நான்கு வழிச்சாலையாக மாற்றினார் திமுக சார்பில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு. ஆனால், பத்து ஆண்டுகளாக நெடுஞ்சாலையைக் கவனித்து வரும் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்?
உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை, எவலநாசூர் பேட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டனம் போன்ற இடங்களில் இருவழிச்சாலைகளாக மாற்றக் கடந்த பத்து ஆண்டுகளாக ஏதாவது செய்தாரா? இல்லை.
கொச்சி துறைமுகம் முதல் கடலூர் துறைமுகம் வரையிலான இணைப்புச் சாலை இது. இந்த எட்டு இடங்களில் எத்தனையோ முறை விபத்துகள் ஏற்படுகிறது. அதற்கு ஏதாவது தீர்வு கண்டாரா பழனிசாமி? இல்லை. எட்டுவழிப்பசுமைச் சாலையைத் தனது தனிப்பட்ட லாபத்துக்காக நிறைவேற்றத் துடிக்கும் பழனிசாமி, மக்கள் பயன்பாட்டுக்கான இந்தச் சாலைகளைப் பராமரித்தாரா?
இப்படி இந்தப் பணியையும் செய்யாத அதிமுக அரசாங்கம், இந்த மண்டலத்துக்குச் செய்த கெடுதல்கள்தான் அதிகம்.
- எட்டு வழிப் பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சேலம் மக்களை அடித்துத் துரத்திக் கைது செய்தது எடப்பாடி அரசுதான்.
- நிலச்சரிவு ஏற்பட்டு நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க உடனே வரவில்லை முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
- விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததன் மூலமாக ஒட்டுமொத்தமாக வேளாண் மக்களுக்கு துரோகம் செய்த பச்சைத் துரோக பழனிசாமி.
- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டாவை அறிவித்துவிட்டு, அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்காமல் ஏமாற்றும் அரசுதான் இந்த அதிமுக அரசு.
- சாயப்பட்டறைகள் மூலமாகச் சுற்றுச்சூழல் மாசுபடுவதைப் பற்றிக் கவலைப்படாத அரசு இந்த அரசு.
- உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராகப் போராடும் மக்களது கோரிக்கைக்குச் செவிமடுக்காத அரசு இந்த அரசு.
அதாவது சும்மா வாய் வார்த்தைக்குக் கொங்கு மண்டலம் எங்கள் மண்டலம் என்று அதிமுகவினர் சொல்லிக் கொள்கிறார்களே தவிர, இம்மக்களுக்காக அவர்கள் எந்த நன்மையையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. இந்த மண்டலமே தொழில் மண்டலம். அதன் வளர்ச்சிக்காக ஏதாவது செய்தார்களா? என்றால் இல்லை! இவர்கள் நினைத்திருந்தால் தொழில் வளர்ச்சி இந்த மாவட்டத்தில் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்குமா?
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்குச் சாட்சி வேண்டுமானால் திருப்பூர் ஒன்று போதும். 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் பொருளாதாரக் கொள்கையில் தவறுக்கு மேல் தவறு செய்து, இந்திய நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்கு பாஜக அரசு தள்ளிவிட்டது.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை திடீரென பிரதமர் மோடி தடை செய்தார். இதற்குப் பிறகு பாருங்கள், இந்தியாவே தலைகீழாக மாறப்போகிறது; இந்திய நாட்டுக்கு இது பொருளாதாரச் சுதந்திரம் என்றெல்லாம் பத்திரிக்கைகள் எழுதின. ஆனால், என்ன நடந்தது? அதுவரை இருந்த தொழில்கள் – அது மிகப் பெரிய தொழில் நிறுவனமாக இருந்தாலும், சிறுகுறு நிறுவனமாக இருந்தாலும் அவை அனைத்தும் மூச்சுத்திணற ஆரம்பித்தது. அதுதான் உண்மை.
ஏற்கெனவே கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட ஒருவருக்கு மயக்க ஊசியைப் போடுவதைப் போல, அடுத்து ஒரு நடவடிக்கையைப் பிரதமர் மோடி எடுத்தார். அதுதான் ஜிஎஸ்டி கந்து வட்டி வரி வசூலுக்கு இன்னொரு பெயர்தான் ஜிஎஸ்டி என்பதாகும். வரியைச் சீரமைக்கிறோம் என்று சொல்லிச் சீரழித்துவிட்டார்கள். இதுபற்றி திருப்பூர் மக்களுக்கு நான் அதிகம் விளக்க வேண்டியது இல்லை.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்களது ஏற்றுமதி இலக்கை எட்டமுடியாமல் போனதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதானே காரணம்? ஜி.எஸ்.டி. வரிக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு திருப்பூரின் மொத்த வர்த்தகம் 24 சதவிகிதம் குறைந்துவிட்டதாக வர்த்தகர்கள் சொல்கிறார்கள். ஏற்றுமதி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஏற்றுமதி இல்லாததால் உற்பத்தியை இந்த நிறுவனங்கள் குறைத்துவிட்டார்கள். துணியாக ஏற்றுமதி செய்த காலம் போய், நூலாக ஏற்றுமதி செய்யும் காலம் வந்துவிட்டது.
பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஜாப் ஒர்க் வாங்கி தொழில் செய்த நிறுவனங்கள் பணம் இல்லாத காரணத்தால் ஜாப் ஒர்க் வாங்க முடியாமல் தவிக்கின்றன. வாட் வரி விதிக்கப்பட்டபோது சில நிலைகளுக்கு வரி இல்லாமல் இருந்தது. ஆனால் ஜிஎஸ்டியில் அனைத்து நிலைகளிலும் வரி விதிப்பதால் சுமை அதிகமாகி விட்டது என்று சிறு – குறு நிறுவனம் நடத்துவபர்கள் சொல்கிறார்கள். சில நிலைகளில் வாட் வரியில் இருந்ததை விட 3 மடங்கு அதிகமாக ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியது உள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள்.
கச்சாப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. கூடுதலாக முதலீடு செய்ய வேண்டி உள்ளது. இதனால் பலரும் சிறுகுறு நிறுவனங்களை மூடிவிட்டுச் சென்றுவிட்டார்கள். மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் கொள்முதல் விவரங்களைச் சொல்ல வேண்டும். 30ஆம் தேதிக்குள் இவற்றுக்கான வரிகளையும் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும் – என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்து வரி வசூலைப் போல இருக்கிறதே தவிர மக்களாட்சி வரி வசூலாகத் தெரியவில்லை.
எல்லாச் சிறு நிறுவனங்களும் ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இது வர்த்தகத்தையே அழித்து வருகிறது. ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த துணிகள், கரோனா போன்ற பேரிடரால் தேங்கிவிட்டது. வெளிநாடுகளுக்கும் அனுப்பும் சூழல் இல்லை. ஏற்றுமதிக்கான ஊக்குவிப்புத் தொகையைக் குறைத்துவிட்டார்கள். மாதத்தில் பாதி நாள் வேலை இல்லை. வேலை இருந்தாலும் உரிய சம்பளம் கொடுக்க முடிவதில்லை. இதனால் திருப்பூரில் 60 சதவிகித சிறுதொழில் நிறுவனங்கள் முடங்கிவிட்டன என்று புள்ளிவிவரம் சொல்கிறது. மொத்தத்தில் ‘டாலர் சிட்டி’யான திருப்பூர் இன்று ‘டல்’ சிட்டியாகி விட்டது.
தொழிலாளர்கள் நிம்மதியாக இல்லை, சிறு குறு நிறுவனங்களும் நிம்மதியாக இல்லை. ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கின்றன – இதுதான் மோடியின் பொருளாதாரப் பாதை. பெரும் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக சிறு – குறு நிறுவனங்களை மாற்றுவதுதான் உங்களின் பொருளாதாரக் கொள்கையா?
இந்த நிலையில் மாநகராட்சி சொத்து வரியை 100 மடங்கு உயர்த்திவிட்டது. இதனால் வாடகைக் கட்டிடத்தில் இயங்குபவர்கள் அதிக வாடகை கொடுக்க வேண்டி இருக்கிறது. பல நிறுவனங்கள் மாநகராட்சிப் பகுதிக்கு வெளியே சென்று இடம் பார்க்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்துவிட்டது.
இப்படி திருப்பூர் அடைந்த பின்னடைவைச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பின்னடைவைச் சரி செய்ய வேண்டாமா? இதில் இருந்து மீள வேண்டாமா? அதற்காகத்தான் தமிழகம் மீட்போம் என்ற முழக்கத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.
இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு செய்தி வந்துள்ளது. தொழிலாளர்களை அச்சுறுத்தும் செய்தியாக அது உள்ளது. இதுவரை இருந்த 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகப்படுத்தப்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் அது. இதைவிடத் தொழிலாளர் விரோதக் கொள்கை ஒன்று இருக்க முடியாது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தொழிலாளர் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. தொழிலாளர் விரோதச் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. கரோனாவைப் பயன்படுத்தி இதுபோன்ற மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
8 மணி நேர வேலை என்பது 180 ஆண்டுகளுக்கு முன்னால் உலகத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமை ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரை 1942ஆம் ஆண்டு வைஸ்ராய் செயற்குழுவில் அங்கம் வகித்த டாக்டர் அம்பேத்கர், இந்தியத் தொழிலாளர்களுக்கு உருவாக்கித் தந்த உரிமை ஆகும். அந்த உரிமையைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்.