கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இந்நிலையில், சென்னை ஆர்.கே.வி ஸ்டூடியோவில் இயக்குநர் வேலுபிரபாகரனின் ‘கடவுள்-2’ என்னும் படத்தொடக்க விழா நடைபெற்றது.
இதில் இயக்குநர் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது,
“தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் இல்லாத நிலையில் கொல்லைப்புறம் வழியாக நுழைய முயற்சி நடக்கிறது. அதில் ஒரு முயற்சிதான் வைரமுத்துவின் ஆண்டாள் கட்டுரையைச் சர்ச்சைக்குள்ளாக்கியது. இதை எதிர்த்து, சீமான், பாரதிராஜா அல்லது வேலுபிரபாகரன் ஆகியோரில் ஒருவர் வருவார்.
ஆண்டாள் தமிழ்நாட்டில் பிறந்தவர். தமிழ் மொழியில்தான் திருப்பாவை எழுதினார். அவரைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை. இந்து மதம் என்ற ஒன்றே இங்கு கிடையாது.
ஆங்கிலேயர் வந்தபிறகுதான் அந்தச் சொல் இங்கு ஏற்படுத்தப்பட்டது. கருத்தியல்ரீதியாக விமர்சித்துக்கொண்டு இருக்கிறோம். எங்களை ஆயுதம் ஏந்த வைத்துவிடாதீர்கள். முந்தையக் காலம்போல எங்களைக் குற்றப்பரம்பரை ஆக்காதீர்கள்” என்றார்.