முக்கிய செய்திகள்

பேரழிவு மழையெல்லாம் பெய்யாது… பீதியைக் கிளப்ப வேண்டாம்: தமிழ்நாடு வெதர் மேன்

சென்னையை அழித்துவிடும் அளவுக்கு பேரழிவு மழை பெய்யும் என பரவும் தகவல் உண்மையானதல்ல என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஊடகங்களும் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தமது முகநூலில் பதிவிட்டிருப்பதாவது:

ஒரு மொக்கை சாரல்மழைக்கு, நான் ஒரு மொக்கை பதிவு போட்டு இருக்கிறேன். புயல்வந்தால், முன்கூட்டியே நான் அறிவிப்பு செய்யமாட்டேனா.

புயலுக்கு பிந்தைய ஈரப்பதம் காரணமாக, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை பகுதிகளில் நாளை மழை பெய்யக்கூடும்.ஆதலால், இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நல்லமழை கிடைக்கும். நீலகிரி குன்னூர் மலைப்பகுதியிலும் மழை இருக்கும்.

தயவு செய்து புரளியை, வதந்திகளை நம்பாதீர்கள். புதிய புயல்  ஆந்திராவுக்கா, நமக்கா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. அடுத்துவரும் நாட்களில் கனமழை வர இருப்பதாக ஊடகங்களில் செய்திவெளியாகிறது, சென்னையை விட்டு சென்றுவிடவா என்றெல்லாம் என்னிடம் கேட்கிறார்கள் இதெல்லாம் ஓவர் பில்டப்…

அடுத்த 4 நாட்களுக்கு அப்படி ஏதும் நடக்காது. அமைதியாக தூங்குங்கள். நான் இருக்கிறேன், மழை, புயல் குறித்து உங்களுக்கு அறிவிப்பு செய்யாமல்,  போகமாட்டேன், பதிவிடாமல் இருக்கமாட்டேன். ஒரே ஓரு வேண்டுகோள், யாரும் தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள்.

குறிப்பாக நமது ஊடகத்துறை நண்பர்கள், பிரேக்கிங் நியூஸ் போடும் போதும் சிறிது கவனமாக செயல்படுங்கள்…  பீதியை கிளப்ப வேண்டாம். என்னுடைய கன்னியாகுமரி மக்களுக்கு… இனி அந்தப் பகுதியில் புயலோ,மழையோ வராது… பயப்பட வேண்டாம்…           

இவ்வாறு வெதர்மேன் கூறியுள்ளார்.

Don’t believe rumors: Tamilnadu Weather man