சரியும் பொருளாதாரம் தலை நிமிர பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் தலை நிமிர, பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்சமயம் 5 சதவீதமாக குறைந்து 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உற்பத்தித் துறை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, அதன் வளர்ச்சிநிலை குலைந்துப் போய் நிற்பதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

நாட்டு மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள பொருளாதாரப் பின்னடைவுகள் குறித்து, உரிய ஆலோசனைகளைப் பெற்று,

ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பா.ஜ.க. அரசின் கவனமும் முன்னுரிமைகளும் வேறு வகையாக இருப்பது கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரப் பின்னடைவை சீர்செய்து தூக்கி நிறுத்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் அவசர கதியில் மத்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.