முக்கிய செய்திகள்

திராவிடமே ஓய்வு எடு; திறமைக்கு வழிவிடு: மதுரையில் பரபரப்பு போஸ்டர்..


திராவிடமே ஓய்வு எடு; திறமைக்கு வழிவிடு என்று எழுதப்பட்ட போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து துவக்கியுள்ளார். இதற்கு முன்னதாக தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களை அவர்களது இல்லத்திற்கும், அலுவலகத்திற்கும் சென்று சந்தித்தார். இன்று மாலை மதுரை, ஒத்தக் கடையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் தனது கட்சியின் கொடி மற்றும் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்.

கட்சியின் பெயரை அறிவித்த பின்னர் அதுகுறித்த விளக்கத்தையும் கொடுக்கிறார். நேற்று மதுரை சென்ற கமல் ஹாசனின் வருகையை முன்னிட்டு மதுரை முழுவதும் அவரை வாழ்த்தி வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதில் ஒன்று அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைப்பது போல், திராவிடமே ஓய்வு எடு, திறமைக்கு வழி விடு என்று ஒட்டப்பட்டு இருந்தது.

அரசியல் திருப்பங்களுக்கும், சல சலப்புகளுக்கும் பெயர் பெற்ற மதுரையில் இந்த போஸ்டர்கள் அரசியல்வாதிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.